"இது மக்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டது"-பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா


இது மக்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டது-பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா
x
தினத்தந்தி 12 Sept 2023 11:04 AM IST (Updated: 12 Sept 2023 12:17 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகின்றன. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி கண்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன், ராகுல் 111 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பேசுகையில், இன்று விராட் கோலியும், கே.எல். ராகுலும் இணைந்து இந்திய அணி ஒரு பெரிய ஸ்கோரை குவிக்க உதவினர். இருவரும் சதம் அடித்ததன் மூலம் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்கள் என்று ஒரு பெரிய ஸ்கோரை உருவாக்கியது . அவர்கள் விளையாடிய விதம் மக்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டது' என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை அதிவேகமாக எடுத்த வீரர் என்ற புதிய சாதனையையும் தனதாக்கினார். இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது 330-வது ஆட்டத்தில் 13 ஆயிரம் ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. ஆனால் கோலி 278 ஆட்டங்களிலேயே அந்த மைல்கல்லை அடைந்து தெண்டுல்கரை பின்னுக்கு தள்ளிவிட்டார்.

இது குறித்து அவர் பேசுகையில், 'விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 13,000 ரன்களை அடித்து, சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இது மிகப்பெரிய சாதனையாகும். இது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி, இந்திய அணிக்கு வாழ்த்துகள்' என்று பாராட்டியுள்ளார்.


Next Story