ஆஸ்திரேலிய அணியின் ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்பது முன்பே தெரியும் - மார்கஸ் ஸ்டோய்னிஸ்
லக்னோ தரப்பில் அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்தில் 124 ரன்கள் குவித்தார்.
சென்னை,
ஐ.பி.எல் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது.
சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 108 ரன்னும்,. ஷிவம் துபே 66 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய லக்னோ மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் 19.3 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 213 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
லக்னோ தரப்பில் அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்தில் 124 ரன்கள் குவித்தார். இதையடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
ஓப்பனிங் இடத்திற்கு நிறைய பேர் போட்டியிடுகின்றனர். எனவே அவர்களுக்கு நான் வழி விட்டு மிடில் ஆர்டரில் விளையாடுகிறேன். சில பவுலர்களை குறி வைத்தேன். அதில் சில எனக்கு எதிராக ஆபத்தை கொடுக்கும் என்பதால் கவனத்துடன் இருந்தேன்.
பூரன், ஹூடா ஆகியோர் நல்ல இன்னிங்ஸ் விளையாடினர். உங்களுக்கு சில பவுலர்கள் பிடிக்கும். பலரை பிடிக்காது. டி20 போட்டிகள் மிகவும் சவாலானது. அங்கே இது போன்ற சில பெரிய ஸ்கோர் அடிக்கப்படலாம். இம்பேக்ட் வீரர் விதிமுறை புதிய பரிணாமத்தை சேர்த்துள்ளது. அது ஆபத்தாகவும் தெரிகிறது.
இப்போதும் நான் என்னுடைய தேசிய அணியின் பயிற்சியாளருடன் நல்ல உறவில் இருக்கிறேன். எனக்கு ஆஸ்திரேலிய அணியின் ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்பது முன்பே தெரியும். இருப்பினும் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ள இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களுடைய திறமையை நிரூபிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.