விராட் கோலி இப்படியான ஒரு சூழலில் இருப்பது நல்லதுதான் - இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்


விராட் கோலி இப்படியான ஒரு சூழலில் இருப்பது நல்லதுதான் - இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்
x

image courtesy: PTI

விராட் கோலி ரன் குவிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் இருப்பதாக பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

ஆண்டிகுவா,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

ஆனால் இந்த 3 போட்டிகளிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 1, 4 மற்றும் 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார். இதற்கு விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கியதே காரணம் என்றும், மீண்டும் அவர் நம்பர் 3 வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டுள்ளனர். அதற்கு முன்பாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

"எப்போதெல்லாம் விராட் கோலி தொடர்பாக கேள்விகள் எழுகிறதோ, அதனை வரவேற்கிறேன். ஏனென்றால் விராட் கோலியின் பேட்டிங்கை பற்றி கவலைப்பட தேவையே இல்லை. வழக்கம்போல் விராட் கோலி அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார். ஐபிஎல் தொடரில் இருந்து வரும் போதே சிறந்த பார்மில் இருந்தார். தற்போது 3 முறை மோசமாக ஆட்டமிழந்ததால் எதுவும் மாறப் போவதில்லை.

என்னை பொறுத்தவரை விராட் கோலி இப்படியான ஒரு சூழலில் இருப்பது நல்லதுதான். ஏனென்றால் விராட் கோலி இப்போது ரன் பசியுடன் இருக்கிறார். சிறப்பாக விளையாட வேண்டும் என்று கூடுதல் கவனத்துடன் உள்ளார். ஒரு நல்ல பேட்ஸ்மேன் இப்படியான சூழலில் சிக்கியிருப்பது மிகவும் நல்லது. அதனால் அடுத்த சில போட்டிகளை அதிகம் எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஷிவம் துபே மற்றும் அக்சர் படேல் இருவரின் ரோல் குறித்து பேசுகையில், "இந்திய அணியில் இப்போது ஆல் ரவுண்டர்கள் நிரம்பி உள்ளனர். அதனால் சூழலை கணித்து அதற்கேற்ப வீரர்களை பிளேயிங் லெவனில் சேர்த்து வருகிறோம். சூப்பர் 8 சுற்றுக்கு முன் பவுலிங்கிற்கு சாதகமான பிட்சில் விளையாடியது உதவியாகவே இருந்தது. அனைத்து அணிகளும் அனைத்து விதமான பிட்சிலும் விளையாட வேண்டும். வெஸ்ட் இண்டீஸில் ஸ்பின்னுக்கு சாதகமாக பிட்ச் இருந்தால், நம்மிடம் 4 ஸ்பின்னர்கள் இருக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story