இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 9ம் நாளாக நடந்து வருகிறது.
ஜெருசலேம்,
Live Updates
- 15 Oct 2023 8:43 PM IST
தெற்கு காசாவில் சில பகுதிகளுக்கு மீண்டும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக இஸ்ரேலின் எரிசக்தி துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார். முன்னதாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேல் மின்சாரம், எரிபொருள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் துண்டித்து இருந்தது.
இதனால், காசா நகரம் இருளில் மூழ்கியது. அத்தியாவசிய சேவை கிடைக்காமல் மக்கள் தவித்த நிலையில், தெற்கு காசாவின் சில பகுதிகளுக்கு மட்டும் தண்ணீர் வழங்க இஸ்ரேல் முடிவு செய்து இருப்பதாக அந்நாட்டின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- 15 Oct 2023 7:45 PM IST
கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கும் வீரர்கள்
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 7-ந்தேதி போர் வெடித்தது. அப்போது முதல் இஸ்ரேல் ராணுவம், காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. இதில் காசா நகரம் பேரழிவை சந்தித்து வருகிறது.ஏற்கனவே உயிருக்கு பயந்து சுமார் 4.23 லட்சம் மக்கள் காசாவைவிட்டு வெளியேறி பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் ஐ.நா. ஏற்படுத்தியுள்ள முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த சூழலில் காசாவின் வடக்கு பகுதி போர் மண்டலமாக அறிவித்த இஸ்ரேல் ராணுவம் அங்கு வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் 24 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதித்தது. தற்போது மேலும் 3 மணி நேரம் கெடு விதித்து இருக்கிறது. இதனால், இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை தொடங்கலாம் என்கிற அச்சத்தால் வடக்கு காசா மக்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
மக்கள் தங்களது உடைமைளை கார்கள், லாரிகள் மற்றும் கழுதை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு தெற்கு காசா நோக்கி சென்று வருகின்றனர். வாகன வசதி இல்லாத பலர் நடைபயணமாகவே தெற்கு காசாவுக்கு செல்கின்றனர்.
இத்தகைய சூழலில், இஸ்ரேல் ராணுவத்தினர் அனைத்து போர் தளவாடங்களுடன் எல்லையில் தயார் நிலையில் காத்திருக்கின்றனர். காசா முனை மீது தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவு கிடைத்த மறுநொடியே தாக்குதலை தொடங்க ஏற்ப தயார் நிலையில் வீரர்கள் உள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருக்கும் பகுதியிலேயே அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியிருக்கிறது.
- 15 Oct 2023 6:30 PM IST
காசாவில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை உடனே வெளியேற்றுவது கடினம் என்று ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த இருப்பதாக கூறிய இஸ்ரேல், மக்கள் வெளியேறுவதற்கு மூன்று மணி நேர கெடுவை விதித்துள்ளது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவை இவ்வாறு தெரிவித்துள்ளது.
- 15 Oct 2023 5:35 PM IST
மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பான இடங்களை விட்டு வெளியே வர வேண்டாம் என இஸ்ரேல் மக்களுக்கு அந்நாட்டு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹமாஸ் படையினர் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை ராணுவம் தரப்பில் இருந்து மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ், ஸ்டீரோட், அஸ்- ஹலான் உள்ளிட்ட நகரங்களில் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக சைரனும் ஒலித்தது. இதனால் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் கூடுதல் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- 15 Oct 2023 4:55 PM IST
இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்களை அழைத்து செல்வதற்காக சிறப்பு கப்பல் வரும் திங்கள் கிழமை இயக்கப்பட உள்ளது. அமெரிக்க குடிமக்கள் உரிய ஆவணங்களை காட்டி இந்தக் கப்பலில் நாடு திரும்பலாம் என்று இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் இருந்து சைப்ரஸ் நாட்டிற்கு இந்த கப்பல் செல்லும் என்று அமெரிக்க தூதரக வட்டாரங்கள் சொல்கிறன.
- 15 Oct 2023 4:31 PM IST
காசாவில் இருந்து வெளியேறும் மக்களை ஹமாஸ் தடுக்கும், சாட்டிலைட் புகைப்படங்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
- 15 Oct 2023 3:40 PM IST
மேற்கு கரை பகுதியில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 33 பேரை கைது செய்து உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
- 15 Oct 2023 3:12 PM IST
இஸ்ரேல் - காசா விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு ரஷியா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், போரின் போது பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- 15 Oct 2023 2:58 PM IST
சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு
சிரியாவில் இருந்து இஸ்ரேலின் வடக்கு பகுதியில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை தரப்பில் கூறியதாவது:- “லெபனான் நாட்டை ஒட்டியுள்ள அல்மா நகரில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலில் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக சிரியா மீது பீரங்கி தாக்குல் நடத்தப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.