ஐ.பி.எல். நியாயத்துடன் நடைபெற வேண்டுமெனில் பந்து தயாரிக்கும் கம்பெனியை மாற்ற வேண்டும் - கம்பீர்


ஐ.பி.எல். நியாயத்துடன் நடைபெற வேண்டுமெனில் பந்து தயாரிக்கும் கம்பெனியை மாற்ற வேண்டும் - கம்பீர்
x

image courtesy:PTI

தினத்தந்தி 18 April 2024 11:55 AM IST (Updated: 18 April 2024 11:58 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். நியாயத்துடன் நடைபெற வேண்டுமெனில் பந்து தயாரிக்கும் கம்பெனியை மாற்ற வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார்.

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் கடந்த மாதம் சென்னையில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 32 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. அதன் முடிவில் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்திலும், ஆர்.சி.பி. கடைசி இடத்திலும் உள்ளது.

அதிரடிக்கு பெயர் போன இந்த தொடரில் பொதுவாகவே பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைப்பது வழக்கமாகும். ஆனால் இந்த வருடம் அது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஏனெனில் இந்த முறை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 முறை 270 ரன்களுக்கு மேல் குவித்து ஐ.பி.எல். வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த அணிகளின் வரிசையில் முதல் 2 இடங்களில் உள்ளது. மேலும் கொல்கத்தா அணியும் ஒரு முறை 272 ரன்கள் அடித்துள்ளது. பெங்களூரு 262 ரன்களையும், மும்பை 246 ரன்களையும் குவித்துள்ளது. இப்படியே போனால் இந்த வருடமே 300 ரன்கள் அடிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை எனலாம். அதன் காரணமாக ஐ.பி.எல். தொடரில் பேட்ஸ்மேனுக்கும் பந்து வீச்சாளருக்கும் சமமான போட்டி இல்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் இப்படி அதிரடியாக விளையாடுவதற்கு தற்போதைய குக்கும்புரா நிறுவனத்தின் தரமற்ற பந்துகள்தான் காரணம் என்று இந்திய முன்னாள் வீரரும் மற்றும் கொல்கத்தா அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். எனவே ஐ.பி.எல். நியாயத்துடன் நடைபெற வேண்டுமெனில் பந்து தயாரிக்கும் கம்பெனியை மாற்ற வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "50 ஓவர்கள் தாங்கக்கூடிய பந்துகளை தயாரிப்பாளர் தயாரிக்காமல் போனால் அந்த தயாரிப்பாளரை மாற்ற வேண்டும். பந்து தயாரிக்கும் கம்பெனியை மாற்றுவதில் எந்த தவறும் இல்லை. குக்கும்புரா பந்துகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா" என கூறினார்.


Next Story