இந்திய கிரிக்கெட்டுக்கு நடந்த மிகச்சிறந்த விஷயம் ஐபிஎல் தான்- கவுதம் கம்பீர்
இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே சிறப்பாக விளையாடுவதாக விமர்சனங்களும் எழுகின்றன.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட்டுக்கு நடந்த மிகச்சிறந்த விஷயம் ஐபிஎல் என்றும், அதனை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை. ரோகித், கோலி போன்ற திறமையான ஜாம்பவான்கள் இருக்கும் போதிலும் இந்திய அணியால் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் சோபிக்க முடியவில்லை.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த தோல்விக்கு வீரர்களின் அணுகுமுறையும், ஐபிஎல் தொடருமே காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மற்ற நாடுகளின் வீரர்கள் வெளிநாட்டு 20 ஓவர் லீக் தொடர்களில் விளையாடுவதால் அந்த அனுபவம் அவர்களுக்கு அனைத்து ஐசிசி தொடர்களில் பெரிதும் உதவுகிறது. அதே போல் இந்திய மண்ணில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவங்களை கொண்டு வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்தியாவில் இருதரப்பு தொடர்களிலும் சிறப்பாக விளையாடுகின்றனர். அதே நேரத்தில் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே சிறப்பாக விளையாடுவதாக விமர்சனங்களும் எழுகின்றன.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நடந்த சிறந்த மாற்றம் ஐபிஎல் தொடர் தான் என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது குறித்து கவுதம் கம்பீர் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட்டுக்கு நடந்த மிகச்சிறந்த விஷயம் ஐபிஎல். 2008-ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே, பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்திக்கும் போது, ஐபிஎல் தொடரையே விமர்சிக்கிறார்கள்.
ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், வீரர்களின் ஆட்டத்தையே விமர்சிக்க வேண்டும். அதைவிடுத்து ஐபிஎல் தொடரை காரணம் கூறுவது சரியாக இருக்காது. அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய பயிற்சியாளர்கள் நியமிக்கும் நடைமுறை மீண்டும் வந்துள்ளது. இது மிகச்சிறந்த மாற்றம். இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியளிக்க வேண்டும் என்று ஆழமாக நம்புகிறேன்.
ஏனென்றால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பெரும்பாலும் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். கிரிக்கெட்டில் உணர்வும் கலந்திருக்கிறது. இந்திய அணியை உணர்வுப்பூர்வமாக நேசிப்பவர்களே, இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வேண்டும்.
இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.