ஐபிஎல்: லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நீடிப்பார் - அணி நிர்வாகம் அறிவிப்பு
2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக கம்பீர் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
லக்னோ,
கடந்த 2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த அணியை புனே அணியை வாங்கியிருந்த சஞ்சீவ் கொயங்கா வாங்கினார். இதையடுத்து லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பின்னர் லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆண்டி பிளவர், பவுலிங் பயிற்சியாளராக மார்னே மோர்கல், பீல்டிங் பயிற்சியாளராக ஜாண்டி ரோட்ஸ் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். பின்னர் பஞ்சாப் அணியில் ஆடிவந்த கே.எல். ராகுல், லக்னோ அணிக்கு இடம்பெயர்ந்தார். இதன்பின் ஏலத்தில் சிறப்பாக இயங்கிய லக்னோ அணி, திறமையான வீரர்களை கைப்பற்றியது.
இதையடுத்து இரு சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு லக்னோ அணி தகுதிபெற்றது. இந்த நிலையில் லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த ஆண்டி பிளவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் எம்.எஸ்.கே. பிரசாத்தை லக்னோ அணி வியூக ஆலோசகராக நியமித்தது.
இந்நிலையில், லக்னோ அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. லக்னோ அணியில் இருந்து விலகி, கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் குழு குறித்த அறிவிப்பை லக்னோ அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதில் ஜஸ்டிங் லாங்கர் தலைமை பயிற்சியாளராகவும், கவுதம் கம்பீர் ஆலோசகராகவும், விஜய் தஹியா, பிரவின் தம்பே, மோர்னே மோர்கல் மற்றும் ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் அணியின் உதவிப் பயிற்சியாளர்களாக செயல்பட உள்ளதாகவும், மேலும் ஸ்ரீதரம் ஸ்ரீராம் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.