ஐ.பி.எல் கனவு அணி தேர்வு ; கேப்டனாக தோனி.. ரோகித்துக்கு இடம் இல்லை

image courtesy; AFP
இந்த அணியில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.க்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் இந்த தொடரின் 17-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.
ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அணியை தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், மேத்யூ ஹைடன், டாம் மூடி, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பெற்றனர். அவர்களை தவிர்த்து ஏறக்குறைய 70 பத்திரிகையாளர்களும் இந்த அணியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல்.போட்டிகளை வைத்து இந்த தொடரின் ஆல் டைம் பெஸ்ட் கனவு அணியை இவர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த அணிக்கு இந்தியா மற்றும் ஐ.பி.எல்.தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவற்றிற்கு கேப்டனாக செயல்பட்டு பல கோப்பைகளை பெற்றுக்கொடுத்து அசத்திய எம்.எஸ். தோனியே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் ஐ.பி.எல்.தொடரில் மும்பை அணிக்காக 5 முறை கோப்பை வென்று கொடுத்த ரோகித் சர்மா இந்த அணியில் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த அணியில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆல் டைம் பெஸ்ட் ஐ.பி.எல். கனவு அணி விவரம் பின்வருமாறு;-
எம்.எஸ். தோனி (கேப்டன்), விராட் கோலி, கிறிஸ் கெயில், டேவிட் வார்னர், டி வில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, பொல்லார்ட், ரஷீத் கான், சுனில் நரின், யுஸ்வேந்திர சாஹல், லசித் மலிங்கா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.