ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்
x

Image Courtesy : @IPL twitter

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது.

ஜெய்ப்பூர்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரின் 37-வது லீக் ஆட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். தொடக்கம் முதல் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் பவுண்டரிகள், சிக்ஸர்களை பறக்கவிட்டு 26 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுபுறம் ஜாஸ் பட்லரின்(27 ரன்கள்) விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன்(17 ரன்கள்) துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் கேட்ச் ஆனார். தொடர்ந்து அதிரடி காட்டி ராஜஸ்தான் ரசிகர்களை குஷிப்படுத்திய ஜெய்ஸ்வால் (8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) 43 பந்துகளில் 77 ரன்கள் குவித்த நிலையில், துஷார் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து சென்னை பவுலர் தீக்ஷனா வீசிய 17-வது ஓவரில் ஷிம்ரான் ஹெட்மேயர்(8 ரன்கள்) போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து துருவ் ஜுரேல்-தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்து ரன் ரேட்டை உயர்த்தினர். இதில் 15 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட துருவ் ஜுரேல்(35 ரன்கள்), கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், தீக்ஷனா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 203 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடி வருகிறது.


Next Story