ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்திற்கு எதிராக கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்திற்கு எதிராக கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
x

Image Courtesy : @KKRiders twitter

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில், இன்று ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கேப்டன் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, கேப்டன் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதியது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ரஹ்மத்துல்லா குர்பாஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் குர்பாஸ் ரன் எதுவும் எடுக்காமலும், பின்னர் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களிலும், ராய் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் நிதிஸ் ராணா, ரிங்கு சிங் இணைந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராணா 42 ரன்களில் வெளியேறினார்.தொடர்ந்து வந்த ரசல் அதிரடி காட்டி 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் ரிங்கு சிங் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா 171 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்களிலும், மயங்க் அகர்வால் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 3 பவுண்டரிகளையும், 1 சிக்சரையும் பறக்கவிட்டு 20 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஹாரி புரூக் ரன் ஏதுமின்றி அவுட் ஆகி வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 41 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 36 ரன்களில் கிளாசன் விக்கெட்டை இழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோன நிலையில், ஐதராபாத் அணிக்கு இறுதி ஓவரில் வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்துல் சமாத் மற்றும் புவனேஸ்வர் குமார் களத்தில் இருந்தனர். கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தி 20-வது ஓவரை வீசினார்.

கடைசி ஓவரின் 3-வது பந்தில் அப்துல் சமாத்(21) கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story