ஐ.பி.எல். ஏலம்: சுவாரஸ்யமான ஒரு அலசல்


ஐ.பி.எல். ஏலம்: சுவாரஸ்யமான ஒரு அலசல்
x

ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக 4 வீரர்கள் ரூ.16 கோடிக்கு மேல் விலை போனார்கள்.

கொச்சி,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் கொச்சியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 80 வீரர்கள் மொத்தம் ரூ.167 கோடிக்கு விற்கப்பட்டனர். ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக 4 வீரர்கள் ரூ.16 கோடிக்கு மேல் விலை போனார்கள். இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரனை ரூ.18½ கோடிக்கு பஞ்சாப் கிங்சும், ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீனை ரூ.17½ கோடிக்கு மும்பை இந்தியன்சும், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சை ரூ.16¼ கோடிக்கு சென்னை சூப்பர் கிங்சும், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரனை ரூ.16 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் வாங்கின. ஏலம் தொடர்பான மேலும் சில சுவாரஸ்யமான அலசல் வருமாறு:-

அண்ணனின் தியாகத்துக்கு கிடைத்த பரிசு

அதிகம் அறியப்படாத ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் விவ்ராந்த் ஷர்மா ஒரே நாளில் கோடீஸ்வரனாகி விட்டார். அடிப்படை விலை ரூ.20 லட்சத்தில் இருந்து அவரை இழுக்க கொல்கத்தாவும், ஐதராபாத்தும் போட்டியிட்டன. இறுதியில் ரூ.2.6 கோடிக்கு ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி சொந்தமாக்கியது. இடக்கை பேட்ஸ்மேனான அவர் பகுதி நேர சுழற்பந்தும் வீசக்கூடியவர். 23 வயதான விவ்ராந்த் ஷர்மா தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடி வருகிறார். அவர் கூறும் போது, '2020-ம் ஆண்டு தந்தை இறந்த பிறகு, எங்கள் குடும்பத்தின் கெமிக்கல் தொழிலை எனது அண்ணன் விக்ராந்த் எடுத்து நடத்துகிறார். எனது அண்ணன் குடும்ப பொறுப்பை ஏற்றிருக்காவிட்டால் எனது கிரிக்கெட் கனவு பாதியிலேயே நின்று போயிருக்கும். அவர் தான் என்னை தொடர்ந்து கிரிக்கெட் மீது கவனம் செலுத்தும்படி ஊக்கப்படுத்தினார். சொல்லப்போனால் அவரது தியாகத்துக்கு கிடைத்த பரிசு தான் இதான். என்னை எந்த அணியாவது ஏலத்தில் எடுக்கும் என்று நம்பினேன். ஆனால் இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை' என்றார்.

அயர்லாந்தின் முதல் வீரர்

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் ரூ.4.4 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் கால்பதிக்கும் முதல் அயர்லாந்து நாட்டவர் என்ற சிறப்பை பெறும் 23 வயதான ஜோஷ் லிட்டில் கூறுகையில், 'நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து என்னை எடுத்த குஜராத் அணி நிர்வாகத்துக்கு நன்றி. ஹர்திக் பாண்ட்யா தலைமையின் கீழ் இது போன்ற திறமைமிக்க தரமான அணியுடன் இணைந்து விளையாடுவதை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளேன். அதேசமயம் அயர்லாந்து அணிக்காக தொடர்ந்து சர்வதேச போட்டியில் ஆடுவதை விரும்புகிறேன். அது தான் எப்போதும் எனது முன்னுரிமையாக இருக்கும். ஆனால் ஐ.பி.எல்.-ல் ஆடுவதன் மூலம் நிறைய கற்றுக் கொள்ள முடியும். எனக்கு ஆதரவாக இருக்கும் அயர்லாந்து கிரிக்கெட் சங்க சங்கத்துக்கு நன்றி' என்றார். ஜோஷ் லிட்டில் 53 சர்வதேச 20 ஓவர் ஆட்டங்களில் ஆடி 62 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இதில் 20 ஓவர் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக 'ஹாட்ரிக்' விக்கெட் வீழத்தியதும் அடங்கும்.

பென் ஸ்டோக்சுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா?

முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடும் போட்டிக்கிடையே ரூ.16¼ கோடிக்கு இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சை ஏலத்தில் எடுத்தது. 41 வயதான டோனி இந்த சீசனில் முழுமையாக ஆடுவாரா? என்ற சந்தேகம் நிலவும் நிலையில் ஸ்டோக்சுக்கு கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்சின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறும் போது, 'அணிக்கு ஒரு ஆல்-ரவுண்டர் தேவைப்பட்டார். அதிர்ஷ்டவசமாக ஏலத்தில் பென் ஸ்டோக்சை பெற்றோம். அவரை எடுத்தது குறித்து டோனி மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். ஸ்டோக்சுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா என்று கேட்கிறீர்கள். அதை டோனி தான் முடிவு செய்வார்' என்றார்.

7-வது அணியில் கால்பதிக்கும் மனிஷ் பாண்டே

ஐ.பி.எல்.-ல் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய மனிஷ் பாண்டேவை ரூ.2.4 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது. இது அவர் விளையாடப்போகும் 7-வது ஐ.பி.எல். அணியாகும். இதே போல் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டை ரூ.50 லட்சத்திற்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வாங்கியது. இவருக்கும் இது 7-வது அணியாகும். வேறு எந்த இந்தியரும் இதற்கு முன்பு 6 அணிக்கு மேல் விளையாடியதில்லை. இன்ெனாரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் உனட்கட் 11 முறை ஏலத்திற்கு வந்து எல்லா தடவையும் விலைபோயிருப்பதும் வித்தியாசமான ஒரு சாதனையாகும். ஒட்டுமொத்தத்தில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 9 ஐ.பி.எல். அணிகளில் ஆடியதே சாதனையாக உள்ளது.

அன்று தென்ஆப்பிரிக்கா; இன்று நமிபியா

ஐ.சி.சி.யில் உறுப்பு நாடாக அங்கம் வகிக்கும் நமிபியா அணியைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் டேவிட் வைசை அவரது அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது. ஐ.பி.எல்.-ல் நுழையும் முதல் நமிபியா வீரர் இவர் தான். ஆனால் 37 வயதான டேவிட் வைஸ் ஏற்கனவே ஐ.பி.எல்.-ல் விளையாடி இருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் தென்ஆப்பிரிக்காவில் தான். அந்த அணிக்காக விளையாடிய போது 2015-ம் ஆண்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சில் ஒப்பந்தமாகி இரு சீசனில் 15 ஆட்டங்களில் ஆடி 127 ரன்களும், 16 விக்கெட்டுகளும் எடுத்திருந்தார். அதன் பிறகு நமிபியாவுக்கு இடம் பெயர்ந்த அவர் இப்போது நமிபியா நாட்டு வீரராக ஐ.பி.எல்.-ல் பங்கேற்க உள்ளார்.


Related Tags :
Next Story