ஐ.பி.எல். 2025: மும்பை அணியிலிருந்து வெளியேறுவாரா ரோகித் ..? அஸ்வின் கணிப்பு


ஐ.பி.எல். 2025: மும்பை அணியிலிருந்து வெளியேறுவாரா ரோகித் ..? அஸ்வின் கணிப்பு
x

ரோகித் சர்மாவுக்கு பணம் பெரிதல்ல என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

சென்னை,

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை மெகா ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.

முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த ரோகித் சர்மாவை, வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியிலிருந்து கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா இந்த வருடம் மும்பை அணியிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. டி20 உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த ரோகித் சர்மாவை 50 கோடிகள் கொடுத்து வாங்க பஞ்சாப், டெல்லி போன்ற அணிகள் தயாராக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு பணம் பெரிதல்ல என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். எனவே மும்பை அணியில் ரோகித் தொடர்ந்து விளையாடுவார் என்றும் அவர் கணித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "உண்மையில் ரோகித் போல நீங்கள் சிந்தித்தால் அது தவறில்லை. அதாவது இந்தியாவின் கேப்டனாக இருக்கும் ரோகித் பலமுறை மும்பை அணியை தலைமை தாங்கியுள்ளார். எனவே கேப்டனாக இல்லை என்றால் கூட மும்பை அணிக்காக ரோகித் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடுவார். குறிப்பாக மும்பை அணிக்காக சாதாரண வீரராக விளையாடினாலே அது சூப்பராக இருக்கும் என்று ரோகித் உணர்வார். ரோகித் சர்மா போன்ற சில வீரர்களுக்கு கெரியரின் இந்த சமயத்தில் பணம் பெரிதல்ல" என்று கூறினார்.


Next Story