ஐ.பி.எல். 2025: தோனிக்கு ஆதரவாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்
தோனியை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரராக கருதி குறைந்த விலைக்கு தக்க வைப்பதில் எந்த தவறுமில்லை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது.
ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தற்போது 42 வயதை கடந்துள்ளார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த அவர் சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார்.
அத்துடன் கடந்த சில வருடங்களாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு அவர் பேட்டிங்கில் கடைசி சில ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். அதனால் இந்த வருடத்துடன் தோனி ஓய்வு பெற்றதாகவே பெரும்பாலான ரசிகர்கள் கருதுகின்றனர். இருப்பினும் அடுத்த சீசனில் தோனி விளையாடி சென்னை மண்ணில் ஓய்வு பெறுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. அந்த காரணத்தால் அதிகபட்சமாக ஒரு அணியால் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அது போன்ற நிலையில் தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே தாம் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று எம்.எஸ். தோனி சமீபத்தில் மறைமுகமாக தெரிவித்தார்.
மறுபுறம் தோனியை அன்கேப்ட் வீரராக தக்க வைக்க அனுமதி கொடுக்குமாறு பிசிசிஐயிடம் சென்னை நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று 5 வருடங்கள் கடந்த வீரரை அன்கேப்ட் வீரராக கருதி குறைந்தபட்ச விலைக்கு தக்க வைக்கலாம் என்ற விதிமுறை 2021 வரை இருந்தது. அந்த விதிமுறையை மீண்டும் பயன்படுத்தி தோனியை 20 லட்சத்திற்கு தக்க வைக்க அனுமதிக்குமாறு சிஎஸ்கே கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் அதற்கு மற்ற அணி நிர்வாகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தோனியை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரராக கருதி குறைந்த விலைக்கு தக்க வைப்பதில் எந்த தவறுமில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே சென்னை அணி நிர்வாகம் விரும்புவது போல தோனி விளையாட வேண்டும் என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "தோனி அன்கேப்ட் வீரராக விளையாடுவாரா என்ற கேள்வி காணப்படுகிறது. உண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட வருடமாக விளையாடாத அவர் அன்கேப்ட் பிளேயர் தானே. ஆனால் தோனி போன்ற வீரர் அன்கேப்ட் வீரராக விளையாடலாமா? என்பதுதான் இதில் உள்ள பிரச்சினை. தோனியை பற்றி அனைவரும் அதனை பெரிதுபடுத்துவார்கள்" என்று கூறினார்.