விராட் கோலி அதிரடி வீண்: 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி..!!


விராட் கோலி அதிரடி வீண்: 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி..!!
x

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.

பெங்களூரு,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜெகதீசன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் வெங்கடேஷ் ஐயர் 31 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க அணியின் கேப்டன் நிதிஷ் ராணா களமிறங்கினார்.

மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் பவுண்டரிகள், சிக்சர்கள் என பறக்கவிட்டு அரைசதம் (56 ரன்கள்) விளாசினார். அரைசதத்தை நோக்கி முன்னேறிய நிதிஷ் ராணா 48 ரன்களில் ஆட்டமிழந்து களத்தை விட்டு வெளியேறினார். இறுதியில் ரிங்கு சிங் (18 ரன்கள்) மற்றும் டேவிட் வைஸ் (12 ரன்கள்) களத்தில் இருக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக விஜயகுமார் மற்றும் ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் கேப்டன் விராட் கோலி மற்றும் டூ பிளஸ்சி ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக ரன்கள் குவிக்கத்தொடங்கிய இந்த ஜோடியில் டூ பிளஸ்சி 17 (7) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷபாஸ் அகமது 2 ரன்னும், மேக்ஸ்வெல் 5 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.



அடுத்ததாக விராட் கோலியுடன், லாம்ரோர் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர். இந்த ஜோடியில் லாம் ரோர் 34 (18) ரன்கள் எடுத்திருந்தநிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுமுனையில் 33 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்த விராட் கோலி 54 (37) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக தினேஷ் கார்த்திக்குடன், பிரபு தேசாய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் பிரபுதேசாய் 10 (9) ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹசரங்கா 5 ரன்னும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்தில் 22 (18) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் டேவிட் வில்லி 11 (10) ரன்களும், வைசாக் 13 (8) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பெங்களூரு அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளும், சுயாஷ் சர்மா மற்றும் ரஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றியை பதிவு செய்தது.


Next Story