இந்தூர் டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்தியா 163 ரன்களுக்கு ஆல் அவுட் - ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் இலக்கு


இந்தூர் டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்தியா 163 ரன்களுக்கு ஆல் அவுட் - ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் இலக்கு
x

image courtesy: BCCI twitter

தினத்தந்தி 2 March 2023 5:11 PM IST (Updated: 2 March 2023 5:12 PM IST)
t-max-icont-min-icon

புஜாரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 35-வது அரைசதத்தை பதிவு செய்தார்.

இந்தூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சில் சிக்கித்தவித்த இந்திய அணி, 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 54 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 47 ரன்கள் முன்னிலையுடன் இன்று 2-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி உமேஷ் யாதவின் வேகத்திலும், அஸ்வின் சுழலிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 76.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 12 ரன்களிலும் சுப்மன் கில் 5 ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். தொடர்ந்து களமிறங்கிய புஜாரா அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 35-வது அரைசதத்தை அவர் பதிவு செய்தார். இந்த நிலையில் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் அவுட்டானார்.

தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 60.3 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லியோன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேத்யூ, மிட்செல் ஸ்டார்க் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்திய அணி 75 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.


Next Story