கிரிக்கெட்டில் இந்தியாவின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது - பாகிஸ்தானுக்கு விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூர் பதிலடி!


கிரிக்கெட்டில் இந்தியாவின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது - பாகிஸ்தானுக்கு விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூர் பதிலடி!
x

இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி பிரமாண்டமான மற்றும் வரலாற்று நிகழ்வாக இருக்கும் என்று தாக்கூர் கூறினார்.

புதுடெல்லி,

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தார்.

மேலும், ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் கூறினார்.ஜெய் ஷாவின் இந்த கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சமூகத்திடம் இருந்து கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்பட்டால், பாகிஸ்தான் அணி இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பையில் கலந்துகொள்ளாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்த நிலையில், இதற்கு பதிலடி தரும் விதமாக இன்று நடந்த கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் அறிவிப்புக்கான நிகழ்வின் போது பேசிய மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கூறியதாவது:-

"ஒருநாள் உலகக் கோப்பையும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது.உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஏற்பாடு செய்யப்படும், அது பிரமாண்டமான மற்றும் வரலாற்று நிகழ்வாக இருக்கும். அடுத்த ஆண்டு ஐசிசி உலகக் கோப்பையில் அனைத்து முன்னணி அணிகளும் பங்கேற்கும்.

விளையாட்டுக்கு குறிப்பாக கிரிக்கெட்டுக்கு இந்தியா நிறைய பங்களித்துள்ளது.கிரிக்கெட்டில் இந்தியாவின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது. எந்த விளையாட்டிலும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது.

பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கவலைகள் இருப்பதால் ஆசிய கோப்பை போட்டி தொடர்பாக உள்துறை அமைச்சகம் இது குறித்து முடிவு எடுக்கும்" என்று தாக்கூர் கூறினார்.

இந்தியா கடைசியாக பாகிஸ்தானுக்கு, 2005-06ல் ராகுல் டிராவிட் தலைமையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இருதரப்பு தொடரில் பங்கேற்றது.


Next Story