கொரோனா பாதிப்பால் இந்திய வீரர் அஸ்வின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்வதில் தாமதம்


கொரோனா பாதிப்பால் இந்திய வீரர் அஸ்வின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்வதில் தாமதம்
x

அஸ்வின் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து, ஓரிரு நாட்களில் இங்கிலாந்து செல்வார் என இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடியது. முதல் 4 போட்டிகள் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

தள்ளிவைக்கப்பட்ட அந்த ஒரு டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி கடந்த 16-ந் தேதி இங்கிலாந்து சென்றது. லீசெஸ்டரில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பாக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இந்திய சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வினுக்கு கொரோனா தொற்று இருப்பதும், இதனால் அவர் அணியினருடன் இங்கிலாந்து செல்லவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் அஸ்வின் கொரோனா தொற்றில் இருந்து தேறி விட்டார். ஓரிரு நாட்களில் அவர் இங்கிலாந்து கிளம்பி விடுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் வருகிற 24-ந் தேதி தொடங்கும் லீசெஸ்டர் கவுண்டி அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் அவர் களம் இறங்குவது சந்தேகம் தான்.

இதற்கிடையே, தென்ஆப்பிரிக்க 20 ஓவர் தொடரை முடித்துக் கொண்டு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் இங்கிலாந்து சென்று இந்திய அணியுடன் இணைந்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்ததும் இந்திய அணி அந்த அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.


Next Story