இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் எந்த சிரமமும் இல்லை - ஆகாஷ் சோப்ரா


இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் எந்த சிரமமும் இல்லை - ஆகாஷ் சோப்ரா
x

இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா? என்ற விமர்சனங்கள் காணப்படுகின்றன.

மும்பை,

இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 0 (3 போட்டிகள்) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் கடந்த 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் தோல்வியை சந்திக்காமல் வந்த இந்தியாவின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. இந்த தோல்விக்கு இந்தியாவின் பேட்ஸ்மேன்கள்தான் மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள்.

ஏனெனில் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கை ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாத அவர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் முதல் போட்டியில் 231 ரன்களை தொட முடியாமல் சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 241 ரன்களை அடிக்க முடியாமல் தோற்றது. அதை விட 3வது போட்டியில் 249 ரன்களை துரத்திய இந்தியா 110 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.

அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா? என்ற விமர்சனங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுடைய உள்ளூர் தொடர்களில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் போதுமான அளவுக்கு விளையாடுவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆனால் இலங்கை அணி வேண்டுமென்று இந்தியாவை தோற்கடிப்பதற்காக கொழும்புவில் சுழலுக்கு அதிகமாக கை கொடுக்கும் பிட்ச் அமைத்ததாக அவர் விமர்சித்துள்ளார். எனவே அதிகபடியாக சுழலும் பிட்ச்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடுவதில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு:- "நாமும் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னர்களை எதிர்கொண்ட பின்புதான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருகிறோம். சுழலுக்கு சாதகமான மைதானத்தில் விளையாடுவது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய பிரச்சனை கிடையாது. எனவே நாமும் அது போன்ற மைதானங்களில் விளையாடும் திறமையை கொண்டவர்களே. ஆனால் கொழும்புவில் இருந்ததைப்போல இயல்பை விட அதிகமாக சுழலும் ஆடுகளங்களில் பந்து கொஞ்சம் மெதுவாக நின்று பேட்டுக்கு வருகிறது. அதை நம் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வதில் சிக்கல்களை சந்திக்கின்றனர்.

சமீப காலங்களில் புனே, இந்தூர், கொழும்பு போன்ற மைதானங்களில் நாம் சுழலுக்கு எதிராக தடுமாறியுள்ளோம். குறிப்பாக பந்து அதிகமாக சுழலும்போது நமது பேட்ஸ்மேன்கள் தடுமாறுகிறார்கள். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நாம் பிளாட்டான பிட்ச்களில் அதிகமாக விளையாடுகிறோம். நமது சர்வதேச அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அதிக உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடுவதில்லை. அதனால் நமது பேட்ஸ்மேன்கள் அவ்வப்போது இப்படி சுழலுக்கு எதிராக தடுமாறுவது தொடர்கிறது" என்று கூறினார்.


Next Story