இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் - இன்று நடக்கிறது
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
நவிமும்பை,
பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.
இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நவிமும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 25 சர்வதேச 20 ஓவர் போட்டியில் மோதி இருக்கின்றன. இதில் 18-ல் ஆஸ்திரேலியாவும், 6-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
இதனிடையே இந்திய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார் சமீபத்தில் மாற்றப்பட்டு பேட்டிங் பயிற்சியாளராக கனித்கர் நியமிக்கப்பட்டார். அவர் தான் இந்த தொடரில் பயிற்சியாளர் பணியை கவனிக்கிறார்.