இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட்- மும்பையில் இன்று நடக்கிறது


இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட்- மும்பையில் இன்று நடக்கிறது
x

கோப்புப்படம் 

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது.

மும்பை,

அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்டில் தோற்ற ஆஸ்திரேலிய அணி அடுத்து நடந்த ஒருநாள் போட்டி தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரில் மொத்தம் 10 கேட்ச்களை கோட்டை விட்டு பீல்டிங்கில் சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அத்துடன் ஹர்மன்பிரீத் இந்த தொடரில் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அவர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். ஒரு அணியாக எல்லா துறையிலும் ஒருங்கிணைந்து அசத்தினால் தான் இந்தியா எழுச்சி பெற முடியும்.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. ஒருநாள் தொடரில் பெற்ற உத்வேகத்தை இந்த தொடரிலும் தொடர ஆஸ்திரேலியா தீவிரம் காட்டும். அதே சமயம் ஒரு நாள் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்தியா வரிந்து கட்டும். எனவே போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'நாங்கள் அவ்வப்போது மிகவும் சிறப்பாக விளையாடுகிறோம். பீல்டிங் மற்றும் உடல்தகுதி பிரச்சினை குறித்து நீண்ட நாட்களாக பேசி வருகிறோம். அதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். அந்த முயற்சிக்கு ஒரே மாதத்தில் பலன் கிடைப்பது என்பது கடினம். எங்களது ஆட்டத்தில் உள்ள தவறுகளை நாளுக்கு நாள் குறைத்தால் அணியின் செயல்பாடு சிறப்பானதாக இருக்கும். நான் மோசமான ஷாட் ஆடி ஆட்டமிழக்கவில்லை. வரும் போட்டிகள் முக்கியமானதாகும். அதற்காக நான் அதிக நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டேன். நான் கணிசமாக ரன் எடுத்தால் அது அணிக்கு நல்லதாக அமையும்' என்றார்.


Next Story