தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி; ஐதராபாத்தில் இன்று நடக்கிறது
தொடரை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.
கடைசி 20 ஓவர் கிரிக்கெட்
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த மழை பாதிப்புக்குள்ளான 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 208 ரன்கள் குவித்தும் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சொதப்பியதால் தோல்வியை சந்தித்தது. மழையால் பாதிக்கப்பட்ட 2-வது ஆட்டம் 8 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரோன் பிஞ்ச் (31 ரன்கள்), மேத்யூ வேட் (ஆட்டம் இழக்காமல் 43 ரன்கள்) ஆகியோரின் அதிரடியில் 90 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா (ஆட்டம் இழக்காமல் 46 ரன்கள்) அதிரடியில் கலக்கி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். கடைசி ஓவரில் முதல் 2 பந்துகளில் தினேஷ் கார்த்திக் சிக்சர், பவுண்டரி என்று விளாசி வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இந்திய அணியின் பேட்டிங்கில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இருப்பினும் இவர்கள் ஒருசேர ஜொலித்தால் அணி மேலும் வலுப்பெறும். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அசத்தி வருகிறார்கள். பந்து வீச்சில் காயத்தில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா திரும்பி இருப்பது பலமாகும். அதேநேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் ரன்கள் வாரி வழங்காமல் கச்சிதமாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் கடந்த ஆட்டத்தில் கலக்கினார். ஆனால் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து யுஸ்வேந்திர சாஹல் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ஆர்.அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை மிரட்டல்
ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் மேத்யூ வேட், ஆரோன் பிஞ்ச், கேமரூன் கிரீன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித் ஆகியோரின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் நாதன் எலிஸ் ஆடாதது அந்த அணிக்கு பாதகமானதாக இருந்தது. அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று நம்பப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் கம்மின்ஸ், ஹேசில்வுட், டேனியல் சாம்ஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமானதாகும். சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா கடந்த ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் குடைச்சல் கொடுத்ததுடன் விக்கெட்டுகளையும் வீழ்த்தி கலக்கினார்.
ஐதராபாத் ஆடுகளத்தில் புற்கள் தென்படவில்லை. இதனால் பேட்டிங்குக்கு அனுகூலமாக இருக்கும் இந்த ஆடுகளத்தில் ரன் மழை பொழியக்கூடும். இந்த மைதானத்தில் இதுவரை இரண்டு 20 ஓவர் சர்வதேச போட்டிகள் நடந்து இருக்கின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.ஐதராபாத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளது.
இரவு 7 மணிக்கு...
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் அல்லது ஆர்.அஸ்வின்.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கேமரூன் கிரீன், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மேத்யூவேட், கம்மின்ஸ், நாதன் எலிஸ் அல்லது டேனியல் சாம்ஸ், அல்லது சீன் அப்போட், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.