இலங்கையின் சுழலில் சிக்கிய இந்தியா...தொடரை இழந்த சோகம்


இலங்கையின் சுழலில் சிக்கிய இந்தியா...தொடரை இழந்த சோகம்
x

Image Courtesy: AFP 

இலங்கைக்கு எதிராக 27 வருடங்களுக்கு பின் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது.

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் 1-0 என இலங்கை முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அவிஷ்கா பெர்ணாண்டோ 96 ரன்னும், குசல் மெண்டிஸ் 59 ரன்னும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். இதில் கில் 6 ரன்னிலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் 35 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய இந்திய வீரர்கள் இலங்கையின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதில் கோலி 20 ரன், ரிஷப் பண்ட் 6 ரன், ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன், அக்சர் படேல் 2 ரன், ரியான் பராக் 15 ரன், ஷிவம் துபே 9 ரன், சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய வாஷிங்டன் சுந்தர் 30 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் இந்திய அணி 26.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் இலங்கை அணி 110 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் வெல்லாலகே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இதன் மூலம் இலங்கைக்கு எதிராக 27 வருடங்களுக்கு பின் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story