டி20 உலகக் கோப்பை: வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி- புள்ளி பட்டியலில் முதலிடம்
இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
அடிலெய்டு,
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் கே.எல்.ராகுல் 50 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி -சூர்யகுமார் யாதவ் இருவரும் நிதானமான விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
சூர்யகுமார் யாதவ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். மறுமுனையில் ஹர்திக் பாண்ட்யா 5 ரன்கள், தினேஷ் கார்த்திக் 7 ரன்கள், அக்சர் பட்டேல் 7 ரன்கள் என வெளியேற, இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 64 ரன்களுடனும், அஸ்வின் 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
வங்காளதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட் கைப்பற்றினார். ஷாகிப் அல் அசன் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஹொசைன் சாண்டோ- லிட்டன் தாஸ் களமிறங்கினர்.
ஒருபக்கம் சாண்டோ நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, லிட்டன் தாஸ் பவுண்டரிகளில் ரன்களை குவித்தார். இவரின் அதிரடி ஆட்டத்தால் வங்காளதேச அணி 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது திடீரென மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி தடைபட்டது.
அப்போது டக்வோர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணியை விட 17 ரன்கள் முன்னிலையில் வங்காளதேச அணி இருந்தது. இதனால் போட்டி கைவிடப்பட்டால் வங்காளதேச அணி வெற்றி பெறும் நிலை இருந்தது. பின்னர் அதிர்ஷ்டவசமாக மழை நின்றது. இருப்பினும் மழை காரணமாக போட்டி நேரம் பாதிக்கப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது.
அதன்படி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில், வங்காளதேச அணி ஏற்கனவே 7 ஓவரில் 66 ரன்கள் எடுத்து இருந்தது. இதன் மூலம் வெற்றிக்கு 54 பந்துகளில் 85 ரன்கள் தேவைப்பட மீண்டும் சாண்டோ- லிட்டன் தாஸ் ஜோடி களமிறங்கினர்.
மழை முடிந்த பிறகு தொடர்ந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கை ஓங்கியது. லிட்டன் தாஸ் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் வீசிய துல்லியமான த்ரோவால் ரன் அவுட்டானார். இதன் மூலம் முதல் விக்கெட்டை இழந்த அந்த அணி அதன் பிறகு தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.
சாண்டோ (21 ரன்கள்), கேப்டன் சாகிப் (13 ரன்கள்) அபிப் ஹொசைன் (3 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு கட்டத்தில் மழையால் போட்டி பாதிக்கப்படுவதற்கு முன் 66 ரன்களுக்கு வங்காளதேச அணி ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை. ஆனால் மழை நின்ற பிறகு சுதாரித்து விளையாடிய இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தியதால் வங்காளதேச அணி 12 ஓவர்களில் 102 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இதனால் கடைசி ஓவரில் (16-வது ஓவர் )அந்த அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அர்ஷ்தீப் வீசிய அந்த ஓவரில் வங்காளதேச அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 145 ரன்கள் மட்டுமே அடிக்க, இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதன் வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் பி புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.