ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி தொடரை வெல்லுமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
2-வது ஒருநாள் போட்டி
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
ரோகித் சர்மா
முதலாவது ஆட்டத்தில் நல்ல தொடக்கம் கண்ட ஆஸ்திரேலிய அணியை இந்திய பவுலர்கள் தங்களது சிறப்பான பந்து வீச்சால் 188 ரன்னில் ஆல்-அவுட் செய்தனர். மிட்செல் மார்ஷ் (81 ரன்கள்) தவிர வேறுயாரும் நிலைக்கவில்லை. பின்னர் ஆடிய இந்திய அணி 39.5 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. டாப்-4 வரிசையில் களம் கண்ட இஷான் கிஷன் (3 ரன்), விராட்கோலி (4), சூர்யகுமார் யாதவ் (0), சுப்மன் கில் (20 ரன்) விரைவில் ஆட்டம் இழந்தாலும், 6-வது விக்கெட் இணையான லோகேஷ் ராகுல் (75 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (45 ரன்கள்) ஆகியோர் நிலைத்து நின்று ஆடி இந்திய அணியை கரைசேர்த்தனர்.
நெருங்கிய உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் முதலாவது ஆட்டத்தில் ஆடாத கேப்டன் ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் களம் இறங்குவது இந்திய அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும். அவருக்கு பதிலாக இடம் பெற்ற இஷான் கிஷனுக்கு இடம் கிடைக்காது. மற்றப்படி அணியில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பவுலிங் அற்புதமாக இருந்தது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், முகமது ஷமி, சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கலக்கினர். ஆனால் பேட்டிங் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கவில்லை. 20 ஓவர் போட்டியில் அசத்தும் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டியில் சோபிக்கவில்லை. கடந்த 5 ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காத அவர் தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
இந்தியா தொடரை கைப்பற்றுமா?
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தமட்டில் சிறந்த வீரர்கள் இடம் பிடித்து இருந்தாலும் பேட்டிங்கில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முந்தைய ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் தவிர்த்து மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. அந்த அணியின் பொறுப்பு கேப்டன் ஸ்டீவன் சுமித் இந்திய டெஸ்ட் தொடரில் இருந்தே சொதப்பி வருகிறார். அவர் பேட்டிங்கில் ஏற்றம் காண வேண்டியது அந்த அணிக்கு தேவையான ஒன்றாகும். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். முழங்கை காயம் காரணமாக ஆடாத டேவிட் வார்னர், உடல் நலக்குறைவால் ஒதுங்கிய அலெக்ஸ் கேரி ஆகியோர் இந்த ஆட்டத்தில் ஆடுவார்களா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. அவர்கள் உடல் தகுதிைய எட்டினால் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்படும்.
இந்திய அணி இந்த ஆண்டில் உள்ளூரில் ஆடிய 7 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றியை ருசித்து வீறுநடை போடுகிறது. அந்த வெற்றி பயணத்தை தொடருவதுடன், தொடரையும் கைப்பற்ற இந்திய அணி தீவிர கவனம் செலுத்தும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க ஆஸ்திரேலிய அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
மழை மிரட்டல்
விசாகப்பட்டினம் மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு அனுகூலமாக இருக்கும் என்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம். இங்கு இந்திய அணி இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டை (சமன்) ஆனது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 387 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். அடுத்து இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 280 ரன்னில் ஆல்-அவுட் ஆனதால் அந்த ஆட்டத்தில் இந்திய அணி 107 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது தான் இங்கு அரங்கேறிய கடைசி ஒருநாள் போட்டியாகும்.
விசாகப்பட்டினத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.
பிற்பகல் 1.30 மணிக்கு...
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (இந்தியா), சுப்மன் கில், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அப்போட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.