இதுபோன்ற ஆடுகளம் இந்தியாவில் இருந்திருந்தால்... - நியூயார்க் மைதானத்தை விமர்சித்த இர்பான் பதான்


இதுபோன்ற ஆடுகளம் இந்தியாவில் இருந்திருந்தால்... - நியூயார்க் மைதானத்தை விமர்சித்த இர்பான் பதான்
x

டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் நியூயார்க் மைதானம் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. முன்னதாக கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த உலகக்கோப்பையின் கணிசமான போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

அதனாலேயே அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் நகரில் இந்தியா 3 போட்டிகளில் விளையாடும் வகையில் ஐசிசி அட்டவணையையும் வடிவமைத்தது. ஆனால் அங்குள்ள மைதானம் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக அல்லாமல் பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது.

உலகக்கோப்பை போட்டிக்காக புதிதாக உருவாக்கப்பட்ட இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட முடியாமல் திண்டாடுகிறார்கள். வேறு ஒரு இடத்தில் ஆடுகளத்தை (பிட்ச்) உருவாக்கி பிறகு அதை அப்படியே பெயர்த்து எடுத்து வந்து இங்கு நிறுவியுள்ளனர். 'டிராப் இன் பிட்ச்' என்று அழைக்கப்படும் இந்த செயற்கை ஆடுகளத்தில் பந்து கணிக்க முடியாத அளவுக்கு சீரற்ற முறையில் 'பவுன்ஸ்' ஆகிறது. இங்கு ஓரளவு புற்களுடன் பெரிய வெடிப்புகளும் உள்ளன.

ஏனெனில் அந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே இலங்கையை 77 ரன்களுக்கு சுருட்டிய தென் ஆப்பிரிக்கா அதை துரத்த 16 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. அதேபோல அயர்லாந்து அணி இந்தியாவிடம் அதிரடியாக விளையாட முடியாமல் 96 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அதனால் அந்த மைதானத்தின் மீது பலரும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இதே மைதானத்தில் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது

இந்நிலையில் நியூயார்க் ஆடுகளத்தை விமர்சித்துள்ள இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில், 'அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் இந்த ஆடுகளம் வீரர்களுக்கு பாதுகாப்பற்றது. மோசமானதாக உள்ளது. இதுபோன்ற ஆடுகளம் இந்தியாவில் இருந்திருந்தால் அந்த மைதானத்தில் மீண்டும் ஒரு ஆட்டம் பல ஆண்டுகளுக்கு நடத்தப்படாது. இது இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் தொடர் அல்ல. உலகக்கோப்பை என்பதை மறந்துவிட கூடாது' என்று கூறினார்.


Next Story