நானாக இருந்திருந்தால் இந்நேரம்... - பாபர் அசாமை விமர்சிக்கும் மாலிக்


நானாக இருந்திருந்தால் இந்நேரம்... - பாபர் அசாமை விமர்சிக்கும் மாலிக்
x

அணியில் உள்ள வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதே கேப்டனின் செயலாகும் என்று சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.

லாகூர்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2 வெற்றிகள் (கனடா, அயர்லாந்துக்கு எதிராக), 2 தோல்விகள் (அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிராக) கண்டு சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியதால் கேப்டன் பாபர் அசாம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், 'நான் பாபர் அசாம் இடத்தில் இருந்திருந்தால் இந்நேரம் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பேன். அத்துடன் எனது கிரிக்கெட் ஆட்டம் மீது கவனம் செலுத்துவேன். சமீபத்தில் பாபர் அசாமுக்கு எப்படி மீண்டும் கேப்டன் பதவி வழங்கப்பட்டதோ, அதேபோல் எனக்கு 2009-10-ம் ஆண்டு பாகிஸ்தான் அணியை மீண்டும் வழிநடத்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் அதை ஏற்கவில்லை. எனெனில் அப்போது எனது ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்பினேன்.

நான் விமர்சிக்க வேண்டும் என்று பாபர் அசாமை குறை சொல்லவில்லை. அவர் கேப்டன்ஷிப்பில் முன்னேற்றம் கண்டிருந்தால் அந்த பொறுப்பை தொடரலாம். ஆனால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. அணியில் உள்ள வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதே கேப்டனின் செயலாகும். அவர் இதுவரை மூன்று 20 ஓவர் உலகக் கோப்பை, ஒரு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2 ஆசிய கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தி இருக்கிறார். அதில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை' என்று விமர்சித்துள்ளார்.


Next Story