நடப்பு உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல தவறினால்...இன்னும் 3 தொடர்கள் காத்திருக்க வேண்டும் - இந்திய முன்னாள் பயிற்சியாளர்


நடப்பு உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல தவறினால்...இன்னும் 3 தொடர்கள் காத்திருக்க வேண்டும் - இந்திய முன்னாள் பயிற்சியாளர்
x

Image Courtesy: PTI

தினத்தந்தி 13 Nov 2023 3:22 AM GMT (Updated: 13 Nov 2023 3:49 AM GMT)

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. இந்த லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல தவறினால் மீண்டும் கோப்பையை வெல்ல இன்னும் 3 உலகக்கோப்பை தொடர்கள் காத்திருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய அணியில் தற்போது அனைத்து வீரர்களும் உச்சக்கட்ட பார்மில் உள்ளனர். இது ஐசிசி தொடரில் பட்டத்தை வெல்ல இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாகும்.

இந்தியா உலகக்கோப்பையை வென்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் உலகக்கோப்பையை கையில் ஏந்த அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த முறை கோப்பையை வெல்ல இந்தியா தவறினால், மீண்டும் கோப்பையை வெல்ல இன்னும் 3 உலகக்கோப்பை தொடர்கள் காத்திருக்க வேண்டி இருக்கும்.

தற்போதைய அணியில் 7-8 வீரர்கள் தங்கள் வாழ்நாளின் சிறந்த பார்மில் உள்ளனர். இது அவர்களின் கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம். அவர்கள் பல போட்டிகளில் அணியை வெற்றி பெற வைத்துள்ளனர். இன்னும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் கோப்பையை கையில் ஏந்தலாம்.

இந்திய வேக பந்துவீச்சாளர்கள் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறார்கள். மிடில் ஓவர்களில் ஜடேஜா, குல்தீப் யாதவ் அருமையாக பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story