இங்கிலாந்திடம் பேஸ்பால் இருந்தால் எங்களிடம்.....- சுனில் கவாஸ்கர்
எந்த சூழ்நிலையிலும் அசத்தக்கூடிய விராட் கோலி இந்தியாவிடம் இருப்பதால் இங்கிலாந்தின் சவாலை எதிர்கொண்டு மோதிப் பார்க்க தயாராக இருப்பதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடைசியாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே தோல்வியடைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அந்த டெஸ்ட் தொடருக்கு பின் சொந்த மண்ணில் இங்கிலாந்து உட்பட உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காத இந்தியா தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வருகிறது.
மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20போல அதிரடியாக விளையாடி இங்கிலாந்து தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே 2012-ல் நடந்ததுபோல் இம்முறையும் இந்தியாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து இத்தொடரில் விளையாட உள்ளது.
சொல்லப்போனால் 'பேஸ்பால்' எனப்படும் புதிய அணுகுமுறையை வைத்து இம்முறை உங்களை தோற்கடிக்க வருகிறோம் என்று நாசர் ஹுசைன் முதல் ஜேம்ஸ் ஆண்டர்சன் வரை இந்தியாவை சமீபத்தில் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்திடம் 'பேஸ்பால்' இருந்தால் இந்தியாவிடம் 'விராட்பால்' இருப்பதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதாவது எந்த சூழ்நிலையிலும் அசத்தக்கூடிய விராட் கோலி இந்தியாவிடம் இருப்பதால் இங்கிலாந்தின் சவாலை எதிர்கொண்டு மோதிப் பார்க்க தயாராக இருப்பதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்திய மைதானங்களில் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டம் செல்லுபடியாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;- "அவர்களிடம் பேஸ்பால் இருந்தால் எங்களிடம் விராட்பால் இருக்கிறது. பேஸ்பால் இங்கே வேலை செய்யலாம். ஏனெனில் சமீபத்திய வருடங்களில் இங்குள்ள மைதானங்களில் பவுண்டரிகளின் அளவு சிறியதாகியுள்ளது. மேலும் தவறான இடத்தில் பட்டால் கூட சிக்சர் பறக்கும் அளவுக்கு இப்போதுள்ள பேட்டுகள் வலுவாக தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே பேஸ்பால் இங்கே வேலை செய்யலாம்.
குறிப்பாக ஸ்பின்னர்கள் வரும்போது அவர்கள் பந்தை தூக்கி அடிக்க முயற்சிக்கலாம். அதனால் அவர்கள் அவுட்டாகவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் எங்களுடைய ஸ்பின்னர்களும் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடி மனதளவில் தயாராக இருக்கின்றனர். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் விக்கெட் எடுக்கிறீர்களா இல்லையா என்பதை விட பவுண்டரி அல்லது சிக்சர் கொடுக்கக்கூடாது என்பதே மனநிலையாக இருக்கும்.
எனவே சிக்சர் அடித்தாலும் எங்களுடைய பவுலர்கள் தங்களின் லென்த்தை மாற்றி நெருக்கடி கொடுப்பார்கள். ஐதராபாத் நகரில் நடைபெறும் முதல் போட்டி முக்கியம். அங்குள்ள மைதானம் வேகம் மற்றும் பவுன்ஸ்க்கு கை கொடுக்கும். எனவே ஸ்பின்னர்களுக்கு எதிராக இங்கிலாந்துக்கு இது நல்ல சோதனையாக இருக்கும்" என்று கூறினார்.