பும்ரா பேட்மிண்டன் விளையாட வந்தால்...- இந்திய இளம் கிரிக்கெட் வீரருக்கு சாய்னா பதிலடி


பும்ரா பேட்மிண்டன் விளையாட வந்தால்...- இந்திய இளம் கிரிக்கெட் வீரருக்கு சாய்னா பதிலடி
x

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ரகுவன்ஷி கருத்துக்கு சாய்னா நேவால் பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் கவனம் மற்ற விளையாட்டுகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று நட்சத்திர பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் சமீபத்தில் கூறியிருந்தார்.

அதைப் பார்த்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் இளம் இந்திய வீரர் ரகுவன்ஷி, "ஜஸ்ப்ரித் பும்ரா 150 கிலோமீட்டர் வேக ஸ்பான்சர் பந்தை சாய்னாவின் தலைக்கு நேராக வீசும் போது அவர் எங்கே செல்வார் என்பதை பார்ப்போம்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.

ஆனால் அதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து அதனை நீக்கிய அவர் முதிர்ச்சியின்றி அப்படி பதிவிட்டதாக சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் அவரது கருத்துக்கு சாய்னா நேவால் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு:-

"பேட்மிண்டன் மட்டுமே கடினமான விளையாட்டு அல்ல. நான் அது மிகவும் கடினமான விளையாட்டு என்றும் சொல்லவில்லை. டென்னிஸ், நீச்சல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுமே கடினமானதாகும். முதலில் கடினம் இல்லாமல் கிரிக்கெட்டை விளையாடுவது வேடிக்கையாக இருக்குமா? கால்பந்து கடினம் இல்லையா? எனவே இங்கு அனைத்து போட்டிகளும் மிகவும் கடினம். இருப்பினும் கிரிக்கெட்டில் பேட்டிங் என்பது திறன் அடிப்படையில் கொஞ்சம் கடினம். அதற்கு பிட்னஸ் இல்லை என்றால் எப்படி இந்த லெவலில் உங்களால் விளையாட முடியும் என்றும் நான் சொல்லவில்லை.

ஒருவேளை அது எளிதாக இருந்தால் அனைவராலும் இங்கே விராட் கோலி அல்லது ரோகித் சர்மாவாக வர முடியுமே. எனவே கிரிக்கெட் என்பது அதிக திறன் அடிப்படையான விளையாட்டு என்று நான் கருதுகிறேன். அதே போல பவுலர்களை எதிர்கொண்டால் நான் இறந்து விடப்போவதில்லை. முதலில் நான் ஏன் பும்ராவை எதிர்கொள்ளப் போகிறேன். ஒருவேளை 8 வருடம் கிரிக்கெட்டில் விளையாடியிருந்தால் பும்ராவின் பந்துகளுக்கு நான் பதிலளித்திருப்பேன்.

ஒருவேளை ஜஸ்பிரித் பும்ரா பேட்மிண்டன் விளையாட வந்தால் அவர் என்னுடைய இறகு (பேட்மிண்டன் பந்து) அடியை தாங்க மாட்டார். எனவே இது போன்ற விஷயங்களுக்காக நமது நாட்டுக்குள் நாமே சண்டை போடக்கூடாது. அதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். இங்கே அனைத்து விளையாட்டுகளும் முக்கியம். எனவே அனைத்திற்கும் மதிப்பு கொடுங்கள் என்றே நான் சொல்ல விரும்புகிறேன்" எனக் கூறினார்.


Next Story