ஐ.சி.சி தரவரிசை; அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் முதல் இடத்தை அலங்கரிக்கும் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
துபாய்,
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி படைத்தது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் அணிகளின் தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டது.
இதில் இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (117 புள்ளி), இங்கிலாந்து (111 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில் டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறியதன் மூலம் அனைத்து வடிவ கிரிக்கெட்டுகளின் ஐ.சி.சி தரவரிசையில் முதல் இடத்தை இந்திய அணி அலங்கரிக்கிறது.
இந்திய அணி ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட் (121 புள்ளி) மற்றும் டி20 கிரிக்கெட் (266 புள்ளி) தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.