டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் போது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியிடப்படும் - ஜெய் ஷா தகவல்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியிடப்படும் என்று ஜெய் ஷா கூறியுள்ளார்.
ஆமதாபாத்,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஆமதாபாத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது:-
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது (ஜூன் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது) வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி அரங்கேறும் இடம் மற்றும் அட்டவணை வெளியிடப்படும். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து ஐ.பி.எல். இறுதிப்போட்டியை காண வரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும். உலகக் கோப்பை போட்டி மற்றும் பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் சிறப்பு கமிட்டி ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை தடுப்பதற்கான வாரிய கமிட்டி விரைவில் திருத்தி அமைக்கப்படும். உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடத்த திட்டமிடப்பட்டுள்ள குறுகிய வடிவிலான போட்டி நடைபெறும். அதற்கான இடம் மற்றும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மாற்று வீரரை (இம்பாக்ட் வீரர்) களம் இறக்கும் விதிமுறையை எல்லா அணிகளும், வீரர்களும் பாராட்டியுள்ளனர். இதனால் போட்டியில் அணிகள் 200 ரன்களுக்கு மேல் குவிப்பது அதிகரித்து இருப்பதுடன், பவுண்டரி மற்றும் சிக்கர்கள் அடிக்கும் எண்ணிக்கை முறையே 1,000, 2,000-ம் இலக்கை கடந்துள்ளது. வீரர்களுக்கு ஏற்படும் காயத்தை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் தங்கள் அணி வீரர்களை கவனிக்க டிரெய்னர் மற்றும் விளையாட்டு மருத்துவ குழுவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான டிரெய்னர் மற்றும் மருத்துவ குழுவினரை தேசிய கிரிக்கெட் அகாடமி நேர்காணல் நடத்தி தேர்வு செய்யும்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஜூலை மாதம் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்று மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. அதற்கு முன்னதாக கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி கூடி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பதை இறுதி செய்யும். 2-வது பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு நடத்த முடிவு செய்து இருக்கிறோம். இது குறித்து ஒளிபரப்பு நிறுவனத்துடன் கலந்து ஆலோசித்து போட்டி நடைபெறும் தேதி இறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.