அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் - ஆட்ட நாயகன் அபிஷேக் சர்மா பேட்டி


அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் - ஆட்ட நாயகன் அபிஷேக் சர்மா பேட்டி
x

image courtesy: twitter/@BCCI

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

ஹராரே,

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 100 ரன், ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன், ரிங்கு சிங் 48 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 235 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அவேஷ் கான், முகேஷ் குமார் தலா 3 விக்கெட், ரவி பிஷ்னோய் 2 விக்கெட், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியாவின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு பின் நான் மெதுவாக விளையாடுகிறேன் நீ அடி என்று ருதுராஜ் கெய்க்வாட் தன்னிடம் சொன்னதாக அபிஷேக் கூறியுள்ளார். தம்முடைய இடத்தில் எதிரணி பந்து வீசினால் கண்டிப்பாக அதை அடித்து நொறுக்குவேன் என்று தெரிவிக்கும் அபிஷேக் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இது என்னுடைய சிறந்த செயல்பாடு என்று நினைக்கிறேன். நேற்று சந்தித்த தோல்வி எங்களுக்கு எளிதல்ல. இன்று என்னுடைய நாளாக உணர்ந்தேன். எனவே அதை நான் பயன்படுத்திக் கொண்டேன். டி20 என்பது வேகத்தை பயன்படுத்தி அதை கடைசி வரை எடுத்துச் செல்வது பற்றியதாகும். இந்த நேரத்தில் என் மீது தன்னம்பிக்கை வைத்த பயிற்சியாளர்கள், கேப்டன்கள் மற்றும் அணி நிர்வாகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஒரு இளம் வீரராக அன்றைய நாள் உங்களுக்கானதாக அமைந்தால் அன்று நீங்கள் நன்றாக செயல்பட வேண்டும். நாங்கள் ஒவ்வொரு ஓவராக எடுத்து விளையாடினோம். நீ எதிரணியை அடிக்க வேண்டும் என்று ருதுராஜ் என்னிடம் சொன்னார். எப்போதும் எனது திறமையை நான் நம்புகிறேன். ஒருவேளை பந்து என்னுடைய இடத்தில் இருந்தால் அது முதல் பந்தாக இருந்தாலும் நான் அதை அடித்து நொறுக்கிச் செல்வேன்" என்று கூறினார்.


Next Story