மீண்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாட ஆசைப்படுகிறேன் - ஆஸ்திரேலிய வீரர்


மீண்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாட ஆசைப்படுகிறேன் - ஆஸ்திரேலிய வீரர்
x

image courtesy; AFP

மீண்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாட ஆசைப்படுகிறேன் என ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 109 டெஸ்ட், 158 ஒருநாள் மற்றும் 67 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். மேலும், இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் 103 போட்டிகளில் ஆடியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஸ்டீவ் ஸ்மித் கருதப்பட்டாலும், நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் இடம் பெறவில்லை. மேலும், ஐ.பி.எல் தொடரிலும் கடந்த 2021ம் ஆண்டு முதல் இடம் பெறவில்லை.

ஆனால் இன்றளவும் தான் டி20 கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் போது வாஷிங்டன் அணிக்காக விளையாடியவர் 336 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அவர் ஐ.பி.எல் தொடரில் விளையாட ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது, டி20 உலக கோப்பையில் நான் சேர்க்கப்படாத போது வருத்தம் அடைந்தேன். ஆனால் இது போன்ற விசயங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

டி20 அணியை பொறுத்தவரை அணியில் இடம் பெறும் அனைவருமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தேர்வுக்குழுவினர் விரும்புகின்றனர். தற்போது நான் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாட ஆசைப்படுகிறேன். எதிர்வரும் 2025-ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் மெகா ஏலத்தில் நிச்சயம் எனது பெயரை பதிவு செய்வேன். ஒருவேளை எந்த அணி என்னை வாங்கினாலும் நிச்சயம் அந்த அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று தர வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறேன்.

நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அணியின் கேப்டனும், பயிற்சியாளரும் தான் முடிவு செய்ய வேண்டும். நிர்வாகம் என்னை எந்த இடத்தில் களமிறங்க சொன்னாலும் அந்த இடத்தில் இறங்கி நான் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story