தோனியுடன் விளையாடியதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் -ரஷித் கான்


தோனியுடன் விளையாடியதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்  -ரஷித் கான்
x

Image Courtesy: AFP

ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

அகமதாபாத்,

ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 231 ரன்கள் குவித்தது.

குஜராத் தரப்பில் சுப்மன் கில் 104 ரன்னும், சாய் சுதர்சன் 103 ரன்னும் எடுத்தனர். சென்னை தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 232 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் குஜராத் அணி 35 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் தோனி 11 பந்தில் 26 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரஷித் கான் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசினார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் தோனிக்கு எதிராக விளையாடிய அனுபவம் குறித்து ரஷித் கான் கூறியதாவது, அவர்கள் (கில் மற்றும் சாய் சுதர்சன்) அபாரமாக ஆடினார்கள். கில் மற்றும் சுதர்சன் இருவரின் ஆட்டத்தை பார்த்து ரசித்து இருப்பீர்கள். அவர்கள் விளையாடிய விதத்தை நாங்கள் மிகவும் ரசித்தோம். இறுதியில் வெற்றிப் பக்கத்தில் இருப்பதில் மகிழ்ச்சி.

இப்போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் மகிழ்ச்சி. எனக்கு முதுகுப் பிரச்சினை மற்றும் சில தோள்பட்டை பிரச்சினை இருந்தது. 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருப்பேன் என்று நம்புகிறேன். மிக விரைவில் முழு உடல் திறனை எட்டுவேன். நான் தோனிக்கு எதிராக பந்துவீசியுள்ளேன். அவர் விளையாட வரும்போது அது வித்தியாசமான உணர்வாக இருந்தது. அவருடன் விளையாடியது எங்களுக்கு நல்ல ஆற்றலை கொடுத்தது. அவருடன் விளையாடியதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story