2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை - அமித் மிஸ்ரா
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனை ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கவில்லை.
புதுடெல்லி,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர்.
இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்ற சஞ்சு சாம்சனை ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கவில்லை. ஷிவம் துபேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை களம் இறக்கி இருக்கலாம் என விவாதங்கள் எழும்பின. இந்த தொடருக்கு பின் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் களம் இறங்கி ஆடினார்.
இந்நிலையில் அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ளது. அந்த உலகக்கோப்பை தொடரிலாவது ஆடும் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு எளிதாக வாய்ப்பு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை என்று அமித் மிஸ்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
அடுத்த உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு எளிதாக வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவர் இளம் வயதை கடந்து விட்டார். இளம் வீரர்கள் தான் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக அசத்துவார்கள். எனவே அவர்கள் தான் இந்திய அணிக்கு அதிகம் தேவை என்ற கான்செப்ட்டை விராட் கோலி அறிமுகப்படுத்தினார். ஆனால் விராட் கோலியின் வயது 35. எனவே சஞ்சு சாம்சன் வாய்ப்பை பெற வேண்டுமெனில் அபாரத்துக்கும் அதிகமான செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும்.
தற்போது அணியில் இருக்கும் அவர் அடுத்த 2 வருடங்கள் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் உலகக் கோப்பை வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில் இஷான் கிஷன், ரிஷப் பண்ட், துருவ் ஜுரேல், ஜிதேஷ் சர்மா போன்ற இளம் வீரர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.