அந்த இந்திய வீரர்போல நானும் பேட்டிங் சராசரிக்காக விளையாடுவதில்லை - பாக். வீரர்
விராட் கோலி போன்ற வீரர்கள் அணியின் நலனுக்காக சூழ்நிலையை பார்த்து விளையாடுவார்கள் என்று முகமது ரிஸ்வான் கூறியுள்ளார்.
லாகூர்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான், இந்திய வீரர் விராட் கோலிபோல தாமும் எப்போதுமே பேட்டிங் சராசரிக்காக விளையாடக்கூடிய வீரர் இல்லை என கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;- "முதலில் நீங்கள் அணிக்காக விளையாட வேண்டும். என்னை பொறுத்த வரை பேட்டிங் சராசரியை பார்க்கும் வீரர்கள் சராசரியானவர்கள். ஒருவேளை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் அது புள்ளிவிவரத்தில் எதிரொலிக்கும். அதை ரசிகர்களால் பார்க்க முடியும். எடுத்துக்காட்டாக இந்தியாவின் விராட் கோலி தன்னுடைய பேட்டிங் சராசரியை (பேட்டிங் ஆவரேஜ்) அதிகமாகக் கொண்டுள்ளார்.
ஆனால் அவர் சராசரியில் கவனம் செலுத்துவதில்லை. ஏனெனில் சராசரியான வீரர்கள்தான் சராசரியில் கவனம் செலுத்துவார்கள். விராட் கோலி போன்ற பெரிய வீரர்கள் அணியின் நலனுக்காக சூழ்நிலையை பார்த்து விளையாடுவார்கள். அந்த வகையில் அணிக்கு என்ன தேவைப்படுகிறது என்பதில் நான் கவனம் செலுத்துகிறேன். எனவே ரிஸ்வான் நீங்கள் ஸ்கோர் போர்டை பார்த்து விளையாடுங்கள் என்று அணி நிர்வாகம் கேட்டால் அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவேன். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பந்து பழையதாகி விட்டால் விளையாடுவது எளிதல்ல" என்று கூறினார்.