முதல் இன்னிங்ஸில் நாங்கள் பந்துவீசிய விதம் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன் - சஞ்சு சாம்சன்
சென்னையில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிசுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
சென்னை,
சென்னையில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிசுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் க்ளாசென் 50 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி ஐதராபாத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 36 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ராஜஸ்தான் தரப்பில் துருவ் ஜூரெல் 56 ரன் எடுத்து களத்தில் இருந்தார். ஐதராபாத் தரப்பில் ஷபாஸ் அகமது 3 விக்கெட், அபிஷேக் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினர். ஐதராபாத் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஷபாஸ் அகமதுவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது,
முதல் இன்னிங்ஸில் நாங்கள் பந்துவீசிய விதம் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். எங்கள் பந்துவீச்சாளர் குறித்து நான் பெருமை கொள்கிறேன். பனி எப்பொழுது வருகிறது என்பது குறித்து நம்மால் யூகிக்க முடியாது. இரண்டாவது பேட்டிங் செய்யும் பொழுது பந்து திரும்பியது. எங்களுடைய வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர்கள் இடது கை சுழல் பந்துவீச்சாளர்களை வைத்திருந்தார்கள்.
அவர்களுக்கு அது நன்றாக வேலை செய்தது. இந்த இடத்தில் அவர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள். ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரெல் ராஜஸ்தான் அணிக்கு மட்டும் இல்லாமல் இந்திய அணிக்காகவும் சிறப்பாக செயல்பட கூடிய வீரர்கள். சந்தீப் சர்மா ஏலத்தின் மூலமாக வர முடியாமல் பின்பு வந்து மிகப்பெரிய அளவில் ராஜஸ்தான் அணிக்கு விளையாடி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.