அனைவருக்கும் சஷாங்க் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வார் என நம்புகிறேன் - பிரீத்தி ஜிந்தா நெகிழ்ச்சி
சஷாங்க் சிங் குறித்து பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா, தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அகமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. இதையடுத்து 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் 70 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து களம் இறங்கிய சஷாங்க் சிங் அதிரடியாக ஆடி பஞ்சாப் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய அவர் குஜராத் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். சஷாங்க் சிங்கின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக அடிய சஷாங்க் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
தனியாளாக போட்டியை வென்று கொடுத்த இந்த சஷாங்க் சிங்கை தான் மினி ஏலத்தின் போது தவறாக எடுத்துவிட்டோம் இவர் எங்களுக்கு வேண்டாம் என பஞ்சாப் கிங்ஸ் அணி ஒதுக்கியது. ஐ.பி.எல் ஏலத்தின் போது சஷாங்க் சிங் என்ற பெயரில் 19 வயதில் ஒரு வீரரும், 32 வயதில் ஒரு வீரரும் இருந்தனர். பஞ்சாப் அணி 19 வயது சஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுப்பதற்கு பதிலாக தவறுதலாக 32 வயது சஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்தது. முதலில் இவரை வேண்டாம் என ஏற்க மறுத்த பஞ்சாப் அதன்பின்னர் ஒருவழியாக வீரரை எடுத்துவிட்டோம் எங்களுக்கு இவரின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
இந்நிலையில் சஷாங்க் சிங் குறித்து பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,
"ஐ.பி.எல். ஏலத்தின்போது எங்களைப் பற்றி கூறப்பட்டது குறித்து பேச இதுதான் சரியான தருணம். இந்த சூழலில் வேறு எவரேனும் இருந்திருந்தால் தன்னம்பிக்கையை இழந்திருப்பார்கள்.. ஆனால் சஷாங்க் அப்படி இல்லை. அவர் உண்மையிலேயே ரொம்ப ஸ்பெஷல். தன்னுடைய திறமையால் மட்டுமல்ல, மிகச்சிறப்பான நேர்மறை எண்ணத்தால். ஏலத்தின்போது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் ஜாலியாக எடுத்துக்கொண்டு, தக்க நேரத்தில் தன்னிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை அள்ளினார்.
அதற்கு நான் தலைவணங்குகிறேன். என்னுடைய முழு மரியாதையையும் அவர் பெற்றுவிட்டார். அனைவருக்கும் சஷாங்க் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வார் என நம்புகிறேன். உங்களைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என நினைக்காமல், உங்களது உண்மையான பலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். சஷாங்கை போல, வாழ்க்கை எனும் போட்டியில் நீங்களும் ஒரு ஆட்ட நாயகனாக நிச்சயம் ஆகலாம்" என்று பதிவிட்டுள்ளார்.