பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட அவர் கொடுத்த ஆதரவுதான் காரணம் - சுனில் நரைன்


பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட அவர் கொடுத்த ஆதரவுதான் காரணம் - சுனில் நரைன்
x

முதல் முறையாக கொல்கத்தா ஐ.பி.எல். கோப்பையை வென்ற உணர்வு தற்போது உள்ளதாக சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

2 மாத காலங்களாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த 17-வது ஐ.பி.எல். தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத், கொல்கத்தா அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 18.3 ஓவர்களில் 113 ரன்களில் சுருண்டது.

பின்னர் 114 ரன் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் சுனில் நரின் 6 ரன்னில் வெளியேறினாலும், 2-வது விக்கெட்டுக்கு ரமனுல்லா குர்பாசும், வெங்கடேஷ் அய்யரும் இணைந்து வெற்றிப்பாதையை எளிதாக்கினர். குர்பாஸ் 39 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். வெங்கடேஷ் அய்யர் 24 பந்துகளில் அரைசதம் விளாசியதுடன் வெற்றிக்குரிய ரன்னையும் எடுத்தும் சுபம் போட்டார்.

கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து 10 ஆண்டுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது. வெங்கடேஷ் அய்யர் 52 ரன்களுடனும் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த தொடரில் மொத்தம் 488 ரன்கள் மற்றும் 17 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய சுனில் நரைன் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்நிலையில் சென்னையில் 2012-ல் முதல் முறையாக கொல்கத்தா ஐபிஎல் கோப்பையை வென்ற உணர்வு தற்போது உள்ளதாக சுனில் நரேன் தெரிவித்துள்ளார். மேலும் தம்முடைய பிறந்தநாளில் 3-வது ஐ.பி.எல். கோப்பையை வென்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் அவர் பேட்டிங்கில் முன்னேறுவதற்கு கவுதம் கம்பீர் நிறைய ஆதரவு கொடுத்ததாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"இன்று (அதாவது நேற்று) மைதானத்திற்கு வரும்போது 2012 போன்ற உணர்வு ஏற்பட்டது. அது அற்புதமான உணர்வு. இதை விட சிறந்த பிறந்தநாள் பரிசை நான் கேட்க முடியாது. பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் ஆகிய அனைத்திலும் தற்போது என்னுடைய கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக நான் விளையாடுகிறேன். அது அணியின் வெற்றிக்காக உதவுகிறது. களத்திற்கு சென்று எனக்கு நானே சுதந்திரமாக விளையாடி அணிக்கு சரியான துவக்கத்தை கொடுப்பதே என்னுடைய பேட்டிங் வேலையாகும்.

அதற்கு கவுதம் கம்பீரிடமிருந்து கிடைத்த ஆதரவுதான் காரணம். இந்த சீசனில் அற்புதமாக விளையாடிய பில் சால்ட்டை தற்போது மிஸ் செய்கிறோம். அவருடைய வேலையை குர்பாஸ் பூர்த்தி செய்தார். அது போன்ற ஒரே மாதிரியாக சிந்திக்கும் ஓப்பனிங் பார்ட்னர்கள் உங்களுக்கு கிடைப்பது அணிக்கு நல்லது. எங்களது அணியில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை எடுப்பதால் ஸ்பின்னர்கள் வந்து பந்து வீசும்போது அழுத்தம் குறைவாகவே இருக்கும். அதுவே நாங்கள் சாம்பியன் பட்டம் வெல்ல உதவியது" என்று கூறினார்.


Next Story