அவர் வீசிய ஓவர்தான் போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது - முகேஷ் குமார்


அவர் வீசிய ஓவர்தான் போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது - முகேஷ் குமார்
x

Image Courtesy: X (Twitter)

தினத்தந்தி 8 May 2024 4:28 PM IST (Updated: 8 May 2024 5:26 PM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

டெல்லி,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் பொரேல் 65 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 4 ஓவரில் 25 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின்னர் டெல்லி வீரர் முகேஷ் குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது, "கடைசி ஓவரில் 2 டாட் பந்துகளை மட்டுமே நான் வீச விரும்பினேன். அதன் பின் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற வகையில் பந்து வீசினேன். ரோவ்மன் போவலை அவுட்டாக்க விரும்பினேன். என்னுடைய பலத்தின் மீது நம்பிக்கை வைத்து நான் ஆதரவு கொடுத்தேன்.

அதே சமயம் பிட்ச்க்கு தகுந்தார் போல் பந்து வீசி என்னுடைய வேரியசன்களை பயன்படுத்தினேன். குல்தீப் யாதவின் 18-வது ஓவர்தான் போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது. 200 - 210 ரன்கள் வெற்றிக்கு போராடுவதற்கு தேவையான ஸ்கோராகும். இருப்பினும் நாங்கள் நல்ல துவக்கத்தை பெற்றதால் அதையும் தாண்டி கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரன்களை எடுத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story