'அவர் அதிசய குழந்தை' - இந்திய வீரரை பாராட்டிய வாசிம் அக்ரம்
ரிஷப் பண்ட் காயத்தை சந்தித்தபோது தம்மைப் போன்றவர்கள் கவலைப்பட்டதாக வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
லாகூர்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சந்தித்த காயத்திலிருந்து மீண்டும் குணமடைந்து விளையாடுவது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் அசத்தியது மட்டுமின்றி, டி20 உலகக்கோப்பையிலும் இந்தியா கோப்பையை வெல்ல பங்காற்றினார்.
அதைவிட 634 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கிய ரிஷப் பண்ட் வங்காளதேசத்திற்கு எதிராக சதமடித்து கம்பேக் கொடுத்தார். அதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையும் அவர் சமன் செய்தார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பேட் கம்மின்ஸ் போன்ற தரமான பவுலர்களை அடித்து நொறுக்கியவர் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட அவர் காயத்தை சந்தித்தபோது தம்மைப் போன்றவர்கள் கவலைப்பட்டதாகவும் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இருப்பினும் அதிலிருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பண்ட் அதிசய குழந்தை என்று அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ரிஷப் பண்ட் செயல்பாடுகளை பாருங்கள். சோகத்திலிருந்து மீண்டும் வந்த அவர் தன்னை சூப்பர் மேன் என்பதை காட்டி அதிசயம் நிகழ்த்தியுள்ளார். அவருக்கு விபத்து நேர்ந்த போது பாகிஸ்தானில் நாங்கள் கவலைப்பட்டோம். அதைப் பற்றி நான் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தேன். அதற்கு முன்பாக அவர் ஆஸ்திரேலியாவில் சதமடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்த அவர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ரிவர் ஸ்விப் அடித்தார். பேட் கம்மின்சுக்கு எதிராகவும் அதை அவர் செய்தது ஸ்பெஷல்.
மோசமான விபத்திலிருந்து தற்போது கம்பேக் கொடுத்துள்ள இந்தப் பையன் கண்டிப்பாக மனதளவில் வலுவானவராக இருக்க வேண்டும். அவருடைய இந்த கதை வரும் தலைமுறைகளில் உள்ள இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். ரிஷப் பண்ட் போல உங்களாலும் கம்பேக் கொடுக்க முடியும். முதலில் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்த அவர் 446 ரன்களை 155 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். அவர் அதிசய குழந்தை" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.