ஹெட்-அபிஷேக் சர்மா அதிரடி...ஐதராபாத் 266 ரன்கள் குவிப்பு
ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார்.
டெல்லி,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 35வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே டெல்லியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
பவர்பிளேவான முதல் ஆறு ஓவர்களில் இந்த இணை 125 ரன்கள் குவித்து அசத்தியது. ஒருபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் அரைசதம் அடித்த நிலையில் மறுபுறம் அபிஷேக் சர்மா 46 ரன்னிலும், மார்க்ரம் 1 ரன்னிலும், க்ளாசென் 15 ரன்னிலும் அவுட் ஆகினர்.
மறுமுனையில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹெட் 89 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஷபாஸ் அகமது ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 37 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய அப்துல் சமத் 13 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் அதிரடியாக ஆடிய ஷபாஸ் அகமது அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி ஆட உள்ளது.