சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அவர் தேர்வு செய்யப்பட மாட்டார் - இந்திய முன்னாள் வீரர் கருத்து


சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அவர் தேர்வு செய்யப்பட மாட்டார் - இந்திய முன்னாள் வீரர் கருத்து
x

டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாரை கேப்டனாக அறிவித்துள்ள தேர்வுக்குழு ஒருநாள் கிரிக்கெட்டில் கழற்றி விட்டுள்ளதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் ரோகித் சர்மா 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து டி20 உலகக்கோப்பையில் துணைக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பாண்ட்யாவை கழற்றி விட்டுள்ள அவர் சூர்யகுமாரை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். எதிர்வரும் இலங்கை டி20 தொடரில் சூர்யகுமார் தலைமையில் இந்தியா களமிறங்குகிறது. ஆனால் அதே சுற்றுப்பயணத்தில் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை.

இந்நிலையில் சூர்யகுமாரை டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அறிவித்துள்ள தேர்வுக்குழு ஒருநாள் கிரிக்கெட்டில் கழற்றி விட்டுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- " கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் சூர்யகுமார் இருந்தார். டி20 உலகக்கோப்பை அணியிலும் இருந்த அவர் டேவிட் மில்லர் கேட்சை பிடித்தார். ஆனால் தற்போது அவர் ஒருநாள் அணியில் இல்லை. இது பற்றி அஜித் அகர்கரிடம் கேட்டபோது டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரரான சூர்யகுமாரை தற்போதைக்கு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு கருதவில்லை என்று சொன்னார். எனவே அடுத்து நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சூர்யகுமார் தேர்வு செய்யப்பட மாட்டார் என்றே நீங்கள் கருதலாம்" என கூறினார்.


Next Story