இந்திய அணியின் ஜெர்சியை அணிந்ததும் அவர் வித்தியாசமான வீரராக மாறி விடுவார் - பார்த்திவ் படேல்


இந்திய அணியின் ஜெர்சியை அணிந்ததும் அவர் வித்தியாசமான வீரராக மாறி விடுவார் - பார்த்திவ் படேல்
x

இந்திய டி20 அணியின் துணை கேப்டனான ஹர்திக் பாண்ட்யாவுக்கு நடப்பு ஐ.பி.எல். சீசன் சிறப்பாக அமையவில்லை.

மும்பை,

இன்றுடன் முடிவடையவுள்ள நடப்பு ஐ.பி.எல். தொடரில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்தது. அவருடைய தலைமையில் 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்ற மும்பை 10 தோல்விகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

அந்த அணியின் இந்த தோல்விக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேபோல கேப்டனாக முக்கிய முடிவுகளை எடுப்பதில் சொதப்பிய அவர் தோல்விக்கு முதன்மை காரணமாக அமைந்தார். அந்த நிலையில் அடுத்ததாக நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் முதன்மை ஆல் ரவுண்டராகவும் பினிஷராகவும் அறியப்படும் ஹர்திக் பாண்ட்யா மோசமான பார்மில் உள்ளார்.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சுமாராக செயல்பட்டாலும் தேசத்தின் நீல நிற ஜெர்சியை அணிந்ததும் இந்தியாவுக்காக ஹர்திக் பாண்ட்யா அற்புதங்களை நிகழ்த்துவார் என்று முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் நம்பிக்கையும் ஆதரவும் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"கண்டிப்பாக ஒருமுறை இந்திய அணியின் ஜெர்சியை அணிந்ததும் அவர் முற்றிலும் வித்தியாசமான வீரராக மாறி விடுவார். இந்த ஐ.பி.எல். சீசனில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் இந்திய அணிக்கு முக்கியமானவர். வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அவரால் வெஸ்ட் இண்டீஸில் உள்ள சிறிய மைதானங்களில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா மிகவும் முக்கியமான வேலையை செய்வார்" என்று கூறினார்.


Next Story