பும்ரா போன்ற பவுலர்கள் உருவாக அவர்தான் காரணம் - இந்திய முன்னாள் கேப்டனை பாராட்டிய பிலாண்டர்


பும்ரா போன்ற பவுலர்கள் உருவாக அவர்தான் காரணம் -  இந்திய முன்னாள் கேப்டனை பாராட்டிய பிலாண்டர்
x

image courtesy; AFP

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பும்ரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கேப்டவுன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் ஆளுக்கு ஒன்று வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் சமீப காலங்களில் ஜஸ்பிரித் பும்ரா போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாவதற்கு 2014 - 2021 வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி முக்கிய காரணமாக இருந்ததாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் வெர்னோன் பிலாண்டர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;- "ஒவ்வொரு முறையும் தென் ஆப்பிரிக்காவுக்கு வரும்போது இந்திய அணி கடந்த சுற்றுப்பயணத்தை விட முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய துணை கண்டத்தில் ஸ்பின்னர்கள் வெற்றிகளை பெற்றுக்கொடுப்பார்கள். ஆனால் தற்போது அதையும் தாண்டி ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வென்றதை பார்ப்பது நன்றாக இருக்கிறது.

அது தரமான வேகப்பந்து வீச்சாளர்களை அவர்கள் உருவாக்கி வருவதற்கான நேர்மறையான அறிகுறியாகும். அது கேப்டனின் ஆதரவால்தான் நடைபெறுகிறது. குறிப்பாக விராட் கோலி தன்னுடைய பவுலர்கள் பல்வேறு சூழ்நிலைகளுக்கு சென்று கற்றுக்கொண்டு முன்னேறுவதற்கு தேவையான ஆதரவை கொடுத்த வலுவான தலைவராக இருந்தார்'என்று கூறினார்.



Next Story