ஹாரி புரூக் அதிரடி சதம்... ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி


ஹாரி புரூக் அதிரடி சதம்... ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
x

Image Courtesy: AFP 

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹாரி புரூக் 110 ரன்கள் எடுத்தார்.

டர்ஹாம் கவுண்டி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி டர்ஹாம் கவுண்டியில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 304 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 77 ரன், ஸ்டீவ் ஸ்மித் 60 ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட், பிரைடன் கார்ஸ், பெத்தேல், வில் ஜேக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 305 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் புகுந்தது. இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டக்கட் 8 ரன்னிலும், சால்ட் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். தொடர்ந்து வில் ஜேக்ஸ் மற்றும் கேப்டன் ஹாரி புரூக் இணைந்து ரன் வேட்டையில் ஈடுபட்டனர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர்.

இதில் ஜேக்ஸ் அரைசதம் அடித்த நிலையில் 84 ரன்னிலும், அடுத்து வந்த ஜேமி ஸ்மித் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து லிவிங்ஸ்டன் களம் இறங்கினார். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து 37.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 254 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்ததால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது.

அப்போது டி.எல்.எஸ் முறைப்படி 46 ரன் முன்னிலையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் 110 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இங்கிலாந்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது ஒருநாள் போட்டி வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.


Next Story