கில் பரவாயில்லை.. ஆனால் ரோகித்துக்கு பின் அவர்தான் சரியான கேப்டன் - இந்திய முன்னாள் வீரர்


கில் பரவாயில்லை.. ஆனால் ரோகித்துக்கு பின் அவர்தான் சரியான கேப்டன் - இந்திய முன்னாள் வீரர்
x

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

ஹராரே,

ஐசிசி 9-வது டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அந்த தொடருடன் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். இளம் தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஓய்வை அறிவித்தனர்.

அந்த சூழ்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்திய வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஓரளவு நன்றாக செயல்பட்டு வரும் கில் இந்திய அணியில் நிலையான இடம் பிடித்துள்ளார். எனவே அடுத்த கேப்டனாக வளர்க்கும் நோக்கத்தில் அவருக்கு இத்தொடரில் தேர்வுக்குழு கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுத்துள்ளது.

இந்நிலையில் சுப்மன் கில்லை விட ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மாவுக்கு பின் அடுத்த டி20 கேப்டனாக செயல்பட தகுதியானவர் என்று முன்னாள் வீரரான சபா கரீம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

"அவரிடம் (சுப்மன் கில்) திறன் இருக்கிறது. ஆனால் வருங்காலங்களிலும் அவரால் கேப்டனாக இருக்க முடியும் என்று தேர்வாளர்கள் மிகவும் சீக்கிரமாக முடிவு செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போது ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக இருக்கிறார். ரோகித் சர்மாவுக்கு பின் அவர் சரியான அடுத்த கேப்டனாக இருப்பார் என்பது தெளிவாக தெரிகிறது. அதே சமயம் சுப்மன் கில்லை தேர்வுக்குழுவினர் ஆல் பார்மட் பிளேயராக பார்க்கின்றனர்.

எனவே இந்திய அணியை முன்னோக்கி வழி நடத்துவதற்கு அவருக்கு கேப்டன்ஷிப் பண்புகளும் அவசியம் என்று தேர்வாளர்கள் கருதுகின்றனர். அவர் பரவாயில்லை. அதனாலேயே ஜிம்பாப்வே தொடரில் இந்த வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டனாகவும் அவருக்கு நல்ல வாய்ப்பு. மேலும் ஓய்வு பெற்ற ரோகித், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்கு தற்போது நிறைய வீரர்கள் பொருந்துபவர்களாக இருக்கின்றனர். சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் அல்லது அபிஷேக் ஷர்மா ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்க தயாராகவே உள்ளனர். இந்த 3 - 4 வீரர்கள் அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்காக காத்திருக்கின்றனர்" என்று கூறினார்.


Next Story