களம் இறங்கி உற்சாகமாக விளையாடி உங்களது திறமையை வெளிப்படுத்துங்கள் - பாண்ட்யா
எங்களுக்குரிய நாளாக அமையும் போது இந்திய அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம் என இலங்கை கேப்டன் ஷனகா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டயா அணியை வழிநடத்த உள்ளார். 2024-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சரியான வீரர்களை அடையாளம் காண்பதற்கான தொடக்கமாக இந்த தொடர் அமையும்.
அத்துடன் ஹர்திக் பாண்ட்யாவை 20 ஓவர் அணிக்கான நிரந்தர கேப்டனாக நியமிப்பதற்கான அடித்தளமாகவும் இந்த தொடர் இருக்கப்போகிறது. மூத்த வீரர்களை பொறுத்தவரை அடுத்த 20 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடிப்பது கடினம் தான். அதனால் இனி அவர்கள் ஒதுங்கி விடுவதற்கு வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டில் இந்தியா அதிகபட்சமாக மொத்தம் 40 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. 31 வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதே போல் இந்த ஆண்டிலும் பரிசோதனை முயற்சியாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து இரு அணி கேப்டன்கள் கூறியதாவது:-
இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது,
'எங்களது வீரர்களுக்கு நான் சொல்லி இருப்பது என்னவென்றால் களம் இறங்கி உற்சாகமாக விளையாடி உங்களது திறமையை வெளிப்படுத்துங்கள். அணி நிர்வாகம் உங்க ளுக்கு ஆதரவாக இருக்கும் என்பது தான்'
இலங்கை அணியின் கேப்டன் ஷனகா கூறியதாவது,
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் எங்களுக்கு நன்றாக அமையவில்லை. எனவே இந்த தொடரை சிறப்பாக தொடங்குவதை எதிர்நோக்கி உள்ளோம். எங்களுக்குரிய நாளாக அமையும் போது இந்திய அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.