ஆசிய கோப்பை கிரிக்கெட் குறித்து ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தின் போது ஆலோசனை - ஜெய் ஷா தகவல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை எந்த நாட்டில் நடத்துவது என்பது குறித்து ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தின் போது ஆலோசனை நடத்த இருப்பதாக ஜெய் ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அந்த போட்டியை செப்டம்பர் மாதம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது, அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்திற்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா அறிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க நேரிடும் என்று எச்சரித்தது.
இதைத் தொடர்ந்து பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா சம்பந்தப்படாத 4 ஆட்டங்களை மட்டும் பாகிஸ்தானிலும், இறுதிப்போட்டி உள்பட மற்ற ஆட்டங்களை வேறு நாட்டிலும் நடத்தலாம் என்று பாகிஸ்தான் யோசனை தெரிவித்தது. இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கையில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் எந்த தீர்க்கமான முடிவும் இன்னும் எட்டப்படவில்லை.
இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவிடம் நேற்று கேட்ட போது, 'இப்போது வரைக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாங்கள் 'பிசி'யாக இருக்கிறோம். இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர்கள் வருகிற 28-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்கும் ஐ.பி.எல். இறுதிப்போட்டியை பார்க்க வருகிறார்கள். அப்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து, அதன் பிறகு இறுதி முடிவு எடுப்போம்' என்றார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அடுத்தகட்டமாக ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழுவை கூட்டி ஆசிய கோப்பை எங்கு நடைபெறும் என்பதை முறைப்படி அறிவிப்பார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய அணியுடனான ஆட்டத்தை பொதுவான இடத்தில் ஆடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை அவர்கள் துபாயில் நடத்த விரும்புகிறார்கள். அப்போது தான் டிக்கெட் வருமானம் அதிகமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். 2022-ம் ஆண்டு இலங்கையில் நடக்க வேண்டிய ஆசிய கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அச்சமயம் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் துபாயில் நடந்தது. இதன் மூலம் இலங்கை கிரிக்கெட் வாரியம் ரூ.4 கோடியை டிக்கெட் வருவாயாக பெற்றது. எது எப்படி என்றாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு அறிவிக்கப்படும்' என்றார்.
ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கும் 6 அணிகளில் ஒரு பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளமும், மற்றொரு பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆபகானிஸ்தானும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். கணிப்புப்படி எல்லாம் சரியாக நகர்ந்தால் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மொத்தம் 3 முறை மோத வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.