இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ருமேலி தார் ஓய்வு


இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ருமேலி தார் ஓய்வு
x

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ருமேலி தார் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

புதுடெல்லி,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான 38 வயது ருமேலி தார் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 2003-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுக வீராங்கனையாக களம் இறங்கிய ஆல்-ரவுண்டரான ருமேலி தார் இந்திய அணிக்காக 4 டெஸ்ட், 78 ஒருநாள் மற்றும் 18 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ருமேலி தார் கடந்த ஆண்டு வரை உள்ளூர் போட்டிகளில் பெங்கால் அணிக்காக ஆடினார்.

இது குறித்து ருமேலி தார் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "மேற்கு வங்காளத்தில் உள்ள ஷியாம் நகரில் இருந்து தொடங்கிய எனது 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை அனைத்து வகையிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்ததன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

எனது நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கை ஏற்றம், இறக்கங்கள் கொண்டதாகும். இந்திய பெண்கள் அணிக்காக ஆடியதும், அணிக்கு தலைமை தாங்கியதும், 2005-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆடியதும் எனது விளையாட்டு வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும்.

கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு உறுதுணையாக இருந்த இந்திய கிரிக்கெட் வாரியம், சக வீராங்கனைகள் மற்றும் என்னுடைய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கிரிக்கெட்டில் இருந்து நான் விடைபெற்றாலும் தொடர்ந்து விளையாட்டுடன் தொடர்பில் இருப்பேன். இளம் வீராங்கனைகளின் திறமையை வளர்க்க என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்" என்று கூறியுள்ளார்.


Next Story